எத்தனை சீனா வந்தாலும் இந்தியாவை ஒண்ணும் பண்ண முடியாது!! வெளிநாட்டு மாநாட்டில் கர்ஜித்த மத்திய அமைச்சர்!
2027ஆம் ஆண்டிற்குள் சீனாவை முந்தி இந்தியா உலகின் நம்பர் ஒன் ஆட்டோமொபைல் உற்பத்தி மையமாக உருவெடுக்கும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நம்பிக்கை உடன் கூறியுள்ளார். எப்போது இந்த கூற்றை அவர் கூறினார்? ஆட்டோமொபைல் வாகனங்கள் உற்பத்தியில் இந்தியா தற்சமயம் எத்தனையாவது இடத்தில் உள்ளது என்ற கேள்விகளுக்கான பதில்களை இனி பார்க்கலாம்.
மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி செக் குடியரசு நாட்டின் பிராகுவே நகரில் நடைபெறும் 27வது உலக சாலை மாநாட்டில் கலந்துக் கொண்டுள்ளார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, பிராகுவே நகரில் ஹைட்ரஜன் பேருந்து ஒன்றில் அமைச்சர் சவாரி செய்து அதனை ஆய்வு செய்து பார்த்ததாக நமது செய்தித்தளத்தில் கூட சமீபத்தில் கூறியிருந்தோம்.

இந்த நிலையில், 27வது உலக சாலை மாநாட்டில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தனது உரையாடலை வழங்கியுள்ளார். அப்போது அவர், 2027க்குள் சீனாவை முந்தி இந்தியா உலகின் நம்பர் ஒன் ஆட்டோமொபைல் நிறுவனமாக உருவெடுக்கும் என உளமாற தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, அடுத்த 3-4 வருடங்களில் உலகின் பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக மாற வேண்டும் என்று தங்களது நாடு இலக்கை நிர்ணயித்துக் கொண்டுள்ளதாகவும் கூறினார்.
தலைநகர் டெல்லியில் ரிங் ரோடு திட்டமாக அர்பன் எக்ஸ்டென்ஷன் ரோடு-2 இன்னும் 2-3 மாதங்களில் திறக்கப்பட உள்ளதாக கூறும் அமைச்சர் நிதின் கட்கரி, இந்த சாலை பயன்பாட்டிற்கு வந்த பின் டெல்லியில் விமான நிலையத்தை அடைவது இன்னும் எளிமையானதாகவும், நேரம் குறைவானதாகவும் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இவ்வாறு நாடு முழுவதும் சாலை கட்டமைப்புகள் விரிவுப்படுத்தப்படுவதால், அதற்கேற்ப ஆட்டோமொபைல் வாகனங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என கணிக்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி, உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளுள் ஒன்றாகவும் நம் இந்தியா விளங்குவதால் இந்த இலக்கை எளிதாக எட்டிவிடுவோம் என்பது உறுதி. 9 வருடங்களுக்கு முன்பு, அதாவது 2014இல் இந்தியாவின் மொத்த ஆட்டோமொபைல் சந்தையின் மதிப்பு வெறும் ரூ.4.5 லட்ச கோடி மட்டுமே. ஆனால், இப்போது ரூ.12.5 லட்ச கோடி ஆகும். கடந்த 2022ஆம் ஆண்டில் தான் ஜப்பானை முந்தி உலகின் மிக பெரும் ஆட்டோமொபைல் சந்தையாக இந்தியா 3வது இடத்திற்கு வந்தது.
இப்போதைக்கு நமக்கு முன்னால் இருப்பவை, சீனாவும், அமெரிக்காவும் மட்டுமே. ஆனால், இவை இரண்டை காட்டிலும், இந்தியாவில் வாகனங்களை உற்பத்தி செய்யவே பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் விரும்புகின்றன. ஏனெனில், இந்தியாவில் தொழிலாளர்கள் ஊதியம் குறைவு, வாகனத்திற்கான பொருட்களை பெறுவதும்/ உற்பத்தி செய்வதும் எளியது & செலவு குறைந்தது மற்றும் போக்குவரத்துக்கான செலவுகளும் குறைவு.

அதுமட்டுமின்றி, இந்திய அரசாங்கத்தின் திட்டங்களும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாகவே உள்ளன. எல்லாவற்றையும் விட, சீனா, அமெரிக்காவுக்கு இணையாக/ அதற்கும் மேலாக திறமையான பொறியியலாளர்கள் நம்மிடத்திலும் உள்ளனர். இதனாலேயே, இங்கு விற்பனை செய்வதற்காக மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்தியாவை ஓர் உற்பத்தி மையமாக பயன்படுத்துகின்றன.
உலகின் முன்னணி எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனங்களான டெஸ்லா, பிஒய்டி போன்றவையும் இந்தியாவில் முதலீடு செய்து தங்களது தொழிற்சாலைகளை நிறுவ தயாராகி வருகின்றன. ஆனால், இதில் பிஒய்டி நிறுவனத்தின் விண்ணப்பத்தை இந்திய அரசாங்கம் நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில், பிஒய்டி ஓர் சீன எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு தான் வளரும் அதேநேரத்தில் சீனாவை மேலும் வளர்த்துவிடக் கூடாது என்பதிலும் நம் இந்திய அரசாங்கம் தெளிவாக உள்ளது. இதனால், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதற்கு முன்பாகவே இந்தியா உலகின் நம்பர் ஒன் ஆட்டோமொபைல் சந்தையாக உருவெடுத்தாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை. இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இந்தியா இந்த இலக்கை எட்டுமா? கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.


Click it and Unblock the Notifications









