எவ்வளவு பெரிய மனுஷன்!! சாதாரணமா பைக்கில் போறாரு... பைக்கோட விலை எவ்வளவு தெரியுமா?
பிரபல மல்யுத்த வீரர் கிரேட் காளி ஹார்லி-டேவிட்சன் பைக் ஒன்றில் பயணிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. ஹார்லி-டேவிட்சன் பைக்கை ஓட்டுவதில் என்ன ஆச்சிரியம் உள்ளது? என நீங்கள் கேட்பது புரிகிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களுக்கு, இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள இது தொடர்பான வீடியோவை இனி பார்க்கலாம்.
ராயல் என்பீல்டு, டிரையம்ப் என கிளாசிக் மோட்டார்சைக்கிள் பிராண்ட்கள் இருந்தாலும், ஹார்லி-டேவிட்சனின் பைக்குகளுக்கு எப்போதுமே ஓர் சிறப்பு உள்ளது. அமெரிக்க பைக் நிறுவனம் என்பதை இதற்கு முக்கிய காரணமாக சொல்லலாம். அமெரிக்கர்களின் பரந்த உடலமைப்பிற்கு ஏற்ப ஹார்லி-டேவிட்சன் பைக்குகள் நன்கு நீளமானவைகளாவும், கம்பீரமானவைகளாகவும் வடிவமைக்கப்படுகின்றன.

இப்படிப்பட்ட ஹார்லி-டேவிட்சன் பைக்குகள் எவரொருவருக்கும் ஏற்றவை என கூறினாலும், பிரபல இந்திய மல்யுத்த வீரர் கிரேட் காளி முன் ஹார்லி-டேவிட்சன் பைக் ஒன்று குழந்தைகள் பயன்படுத்தும் பைக் போன்று காட்சியளித்துள்ளது. ஏனெனில், WWE பார்ப்பவர்களுக்கு கிரேட் காளி யார் என்பதும், அவரது உயரம் எவ்வளவு என்பதும் தெரிந்திருக்கும்.
சுமார் 7.2 அடி உயரம் கொண்ட கிரேட் காளி இந்த அதிகப்படியான உயரத்தினாலேயே WWE ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகினார். கூடவே, இவர் இந்தியாவை சேர்ந்தவர் என்ற தகவலும் உலகம் முழுவதும் பரவியது. கிரேட் காளி இப்போது எல்லாம் WWE-இல் நடிப்பது இல்லை. இந்தியாவில் தனது கிராமத்தில் இருந்தப்படி, அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பதிவுகளை பதிவிட்டப்படி உள்ளார்.
இந்த வகையில், சமீபத்தில் கிரேட் காளியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. இந்த வீடியோவில், பிரபலமான ஹார்லி-டேவிட்சன் ஹெரிடேஜ் சாஃப்டெயில் கிளாசிக் மோட்டார்சைக்கிளை கிரேட் காளி ஓட்டிவதை பார்க்க முடிகிறது. ஹார்லி-டேவிட்சனின் தாழ்வான ரைடிங் பொசிஷனை கொண்ட க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிளாக இருப்பினும், ஹெரிடேஜ் சாஃப்டெயில் கிளாசிக் நன்கு உயரமான பைக் ஆகும்.
இந்த ஹார்லி-டேவிட்சன் பைக்கின் உயரம் 1048மிமீ, நீளம் 2405மிமீ மற்றும் அகலம் 955மிமீ ஆகும். முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் 1635மிமீ ஆகும். தரையில் இருந்து ரைடர் இருக்கையின் உயரமானது கிட்டத்தட்ட 700மிமீ உயரத்தில் உள்ளது. ஆனால் பைக்கின் அடிப்பகுதியானது தரையில் இருந்து வெறும் 131மிமீ உயரத்தில் உள்ளது. பைக்கின் எடை 347 கிலோ. இந்த பைக்கில் 16 இன்ச்சில் அலாய் சக்கரங்கள் பொருத்தப்படுகின்றன.

இவ்வாறு, அளவில் நன்கு பெரிய மோட்டார்சைக்கிளாக இருப்பினும், கிரேட் காளியின் முன் சிறிய மோட்டார்சைக்கிளாக ஹெரிடேஜ் சாஃப்டெயில் கிளாசிக் காட்சி தருகிறது. இந்தியாவில் இந்த ஹார்லி-டேவிட்சன் பைக் இந்த ஆண்டின் துவக்கத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. சாஃப்டெயில் கிளாசிக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.26.56 லட்சம் ஆகும்.
இந்த பைக்கில் 1,690சிசி வி-ட்வின் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜினை கொண்டு ஒரு எஸ்யூவி காரை கூட இயக்கலாம். அந்த அளவிற்கு பெரியதான இந்த என்ஜின் மூலம் அதிகப்பட்சமாக 65 பிஎச்பி மற்றும் 124 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்தியாவில் இந்த பைக்கை மொத்தம் 7 விதமான நிறத்தேர்வுகளில் ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் விற்பனை செய்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கிரேட் காளி போல் உயரமாக இருந்தால் மோட்டார்சைக்கிள்களை ஓட்டுவது மிக அசவுகரியமான விஷயமாக இருக்கும். காரில் பயணிப்பதே சற்று சிரமம் தான். இத்தகையவர்களுக்கு ஹார்லி-டேவிட்சன் பைக்குகள் சரியான தேர்வே. ஆனால், அத்தகைய ஹார்லி-டேவிட்சன் பைக் கூட கிரேட் காளிக்கு சிறியதாக இருக்கிறது என்றால், எத்தகைய உயரத்தை அவர் கொண்டுள்ளார் என்பதை எண்ணிப் பாருங்கள்.


Click it and Unblock the Notifications








