5.5 மீ நீளம், 3 டன் எடை... இந்தியா வந்த சீன அதிபரின் நடமாடும் கோட்டை!
இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சீன அதிபர் ஜி ஜின்பிங் புதுடெல்லி வந்துள்ளார். இந்த பயணத்தின் அவர் பயன்படுத்திய அதிநவீன சொகுசு பாதுகாப்பு காரான ஹாங்கி N701 (Hongqi N701) என்ற பெயரில் அழைக்கப்படும் அதிகாரப்பூர்வ கார் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பொதுவாக உலக தலைவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அந்த நாட்டின் பாதுகாப்பு வாகனங்களையோ அல்லது Mercedes-Maybach போன்ற உயர் ரக கார்களை பயன்படுத்துவது வழக்கம். ஆனால், அமெரிக்க அதிபருக்கு 'தி பீஸ்ட்' (The Beast) கார் இருப்பது போல, சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது சொந்த நாட்டில் தயாரிக்கப்பட்ட ஹாங்கி N701 என்ற கோட்டை நிகரான குண்டு துளைக்காத காரை எங்குச் சென்றாலும் உடன் எடுத்துச் செல்கிறார்.

சீன அரசின் ஆதரவுடன் செயல்படும் மிக பழமையான வாகன உற்பத்தி நிறுவனமான எஃப்.ஏ.டபிள்யூ (FAW Group) நிறுவனத்தின் தயாரிப்பான 'ஹாங்கி' என்ற காரின் பெயருக்கு 'சிவப்பு கொடி' என்று பொருள். அதிபரின் பிரத்யேக பயன்பாட்டிற்காகவே உருவாக்கப்பட்ட இந்த காரின் முழுமையான தொழில்நுட்ப விவரங்களைச் சீன அரசு வெளியிடுவதில்லை என்றாலும், இதன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுமார் 5.5 மீட்டர் நீளமும் 3.1 டன்னுக்கு மேல் எடையும் கொண்ட இந்த காரில் ராணுவ தரத்திலான தடிமனான கவசத் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் ஏகே-47 ரக எந்திர துப்பாக்கிச் சூடு, வெடி குண்டுகள் மற்றும் சக்திவாய்ந்த வெடிமருந்து தாக்குதல்களை எளிதாகத் தாங்கும் திறன் இதற்கு உண்டு. காரின் கண்ணாடிகள் அனைத்தும் பல அடுக்குகள் கொண்ட தடிமனான குண்டு துளைக்காத பாலிகார்பனேட் கண்ணாடிகளால் உருவாக்கப்பட்டுள்ளன.
ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதத் தாக்குதல்களைச் சமாளிக்கும் வகையில் காரின் உட்புறப் பகுதி வெளிப்புறக் காற்று புகாதவாறு முற்றிலும் சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆபத்தான சூழல்களில் காரின் உள்ளே இருக்கும் பயணிகளுக்குத் தடையற்ற ஆக்சிஜன் வழங்குவதற்காகத் தனியாக ஆக்சிஜன் கம்ப்ரஷன் பிளான்ட் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளது.
காரின் 21 அங்குல சக்கரங்களில் ரன்-ஃப்ளாட் டயர்கள் (Run-flat tyres) பொருத்தப்பட்டுள்ளன. ஒருவேளை குண்டு வீச்சில் டயர்கள் முற்றிலும் சேதமடைந்தாலும் அல்லது காற்று குறைந்தாலும் கூட, கார் நிற்காமல் அதிவேகத்தில் ஆபத்தான இடத்தில் இருந்து தப்பிச் செல்லும் வசதி இதில் உள்ளது.
இந்த பிரம்மாண்டமான காரை அதிவேகமாக இயக்க இதன் இன்ஜின் மிகவும் சக்திவாய்ந்ததாக மாற்றப்பட்டுள்ளது. இதில் 6.0 லிட்டர் V12 பெட்ரோல் எஞ்சின் அல்லது 3.0 லிட்டர் V6 டர்போ சார்ஜ்டு ஹைபிரிட் சிஸ்டம் வழங்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த எஞ்சின் சுமார் 408 எச்பி பவரை வெளிப்படுத்தக்கூடியது.
அதிபரின் பயணத்தின் போது எந்தவித தொழில்நுட்பக் கோளாறுகளும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, ஹாங்கி N701 ரக கார்கள் இரண்டு ஒரே மாதிரியாக இருக்கும் வகையில் அவரது வாகன அணிவகுப்பில் (Motorcade) கொண்டு செல்லப்படும். இதில் அதிபர் எந்த காரில் பயணிக்கிறார் என்பதை வெளிப்புறத்தில் இருந்து எளிதாக கண்டுபிடிக்கக்கூடாது என்பதற்காக செய்யப்படும் பாதுகாப்பு வழிமுறையாக உள்ளது.
சீனா தனது உள்நாட்டுத் தொழில் நுட்பத்தையும் உற்பத்தித் திறனையும் உலகிற்குப் பறைசாற்றும் வகையில் இந்த வாகனத்தைப் பயன்படுத்தி வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற சுமார் 50 கார்களை மட்டுமே தயாரிக்க எஃப்.ஏ.டபிள்யூ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அமெரிக்க அதிபரின் கேடிலாக் பீஸ்ட் போன்று டெல்லி வந்துள்ளம் ரஷ்ய அதிபர் புடினின் ஆரஸ் செனட் (Aurus Senat) காரும், சீன அதிபரின் இந்த ஹாங்கி N701 காரும் உச்சி மாநாட்டிற்கு வந்த வாகனங்களிலேயே எல்லோரின் கவனத்தை ஈர்த்த வாகனங்களாக மாறி இருக்கின்றன.
பிரதமர் மோடி ரேஞ்ச்ரோவர் சென்டினல் காரை பயன்படுத்தும் நிலையில், இந்த மாநாட்ட்டிற்காக பல்வேறு நாடுகளில் வந்திருக்கும் உயர் அதிகாரிகள், அரசுத் துறையினருக்காக 500 சொகுசு கார்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் 450, டொயோட்டா வெல்ஃபயர், கியா கார்னிவல், பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் மற்றும் மேபக் கார்கள் இடம்பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications


