அப்படியே மேலே எழும்பும், அப்படியே கீழே இறங்கும்... பறக்கும் காரைவிட சூப்பர் விமானம்!!
ஹெலிகாப்டர் மற்றும் விமானத்தின் சிறப்பம்சங்களை கலந்து கட்டிய ஒரு புதிய விமானத்தை அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மேலும், பறக்கும் கார் போன்று கூட இதற்கு ஓடுபாதை தேவையில்லை.
ஹெலிபேடிலிருந்து மேலே எழும்பி பறக்கும் திறன் கொண்ட விமானம், எதிர்காலத்தில் அம்பானி போன்ற பெரும் பணக்காரர்களின் வீட்டின் ஹெலிபேடில் நிச்சயம் இடம்பிடிக்கும் என்று நம்பலாம்.

அமெரிக்க நிறுவனம்
அமெரிக்காவின் டென்வர் நகரை சேர்ந்த எக்ஸ்டிஐ என்ற நிறுவனம் இந்த விமானத்தை தயாரிக்கிறது. ட்ரைஃபேன்600 என்ற பெயரில் இந்த விமான கான்செப்ட் அழைக்கப்படுகிறது. மிக நவீனமான பாதுகாப்பு வசதிகளை இந்த விமானம் கொண்டிருக்கும்.

விசேஷம் என்ன?
ஹெலிகாப்டர் போன்று மேலே எழும்பவும், தரை இறக்கவும் முடியும். அதேநேரத்தில், விமானங்களை போன்று அதிவேகத்திலும், நீண்ட தூரமும் பயணிக்கும். எனவே, ஹெலிகாப்டர், விமானம் என இரண்டின் சிறப்புகளையும் பெற்ற ஓர் பிரத்யேக விமானம்.

மூன்று புரொப்பல்லர்கள்
ஹெலிகாப்டர் போன்று அதிக இரைச்சலையும், காற்றையும் விசிறியடிக்காது. எனவே, பயணிப்போர் எளிதாக இதில் ஏறி, இறங்க முடியும். இந்த விமானத்தில் இருக்கும் மூன்று புரொப்பலர்கள் விமானத்தை மேலே எழுப்பவும், விமானத்தை முன்னோக்கி செலுத்தவும் பயன்படும்.

சவுகரியம்
பிசினஸ் கிளாஸ் ஜெட் எனப்படும் தனிநபர் பயன்பாட்டு சொகுசு விமானங்களை வைத்திருப்போர்க்கு ஒரு அசவுகரியம் உள்ளது. அந்த விமானங்களுக்கு ஓடுபாதை தேவை என்பதால், வீட்டிலிருந்து விமான நிலையம் செல்ல வேண்டியிருக்கும். ஆனால், இந்த விமானத்தை ஹெலிபேட் அல்லது தற்காலிக சமதள பகுதியிலேயே ஏற்றி, இறக்க முடியும்.

சொகுசு
ந்த விமானத்தின் உட்பகுதி மிக மிக சொகுசாக அமைக்கப்பட்டிருக்கும். அலுவலக மற்றும் தொழில் சார்ந்த பயணிகளை கவனிக்கவும், பொழுதுபோக்கு வசதிகளை பெறும் வகையிலும் வசதிகளும், கட்டமைப்பும் இருக்கும். ஒரு பைலட் மற்றும் 5 பயணிகள் செல்லலாம்.

ரேஞ்ச்
அதிகபட்சமாக மணிக்கு 644 கிமீ வேகத்தில் பறக்கும். அத்துடன், 1,300 முதல் 1,900 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். மேலும், மோசமான வானிலைகளிலிருந்து தப்பும் வகையில், அதிகபட்சமாக 30,000 அடி வரை உயரே பறக்கும் தொழில்நுட்பத்தையும் பெற்றிருக்கிறது.

நேரம் மிச்சம்
இந்த விமானம் வெறும் 90 வினாடிகளில் அதிகபட்ச பறக்கும் உயரத்தை எட்டவல்லது. மேலும், மிக விரைவாக செல்லுமிடத்திற்கு விமானம் போல சென்று ஹெலிகாப்டர் போல இறங்கிவிடும். இதனால், நேர விரயமும் தவிர்க்கப்படும்.

விலை
10 மில்லியன் முதல் 12 மில்லியன் டாலர் விலையில் இந்த விமானம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தற்போது இந்த விமானத்தை வர்த்தக ரீதியில் உற்பத்திக்கு கொண்டு செல்வதற்கு, முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அடுத்த இரண்டரை ஆண்டுகளில் இந்த விமானம் தயாரிப்பு நிலைக்கு சென்றடையும்.


Click it and Unblock the Notifications