இது நிஜமாகவே மறுபிறவி... 5-ஸ்டார் மஹிந்திரா காரை வாங்கியதற்கு பலன் கிடைச்சிருக்கு!!
மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300) கார் உரிமையாளர் ஒருவர் தனது காரில் பெரிய விபத்தில் சிக்கியுள்ளார். இருப்பினும், பெரியதாக எந்த பாதிப்பும் இல்லாமல், சிறிய கீறல்களுடன் அவரது உயிரை கார் காப்பாற்றி உள்ளது. இது அந்த கார் ஓனரை வெகுவாக ஆச்சிரியப்படுத்தியதை அடுத்து, அந்த நபர் ஆனந்த் மஹிந்திராவை டேக் செய்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அது என்ன என்பதை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் தினந்தோறூம் நூற்றுக்கணக்கான சாலை விபத்துகள் நடைபெறுகின்றன. இதனை தடுக்க போலீஸாரும், சமூக ஆர்வலர்களும் பல்வேறு விதமான நடவடிக்கைகளையும், விழிப்புணர்வுகளையும் கொண்டுவந்தாலும், ஒருபக்கம் சாலை விபத்துகள் நடப்பது நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. இதனாலேயே, தரமான மற்றும் வலிமையான கார்களை உருவாக்கும்படி கார் நிறுவனங்களை அரசாங்கம் கேட்டுக் கொண்டு வருகிறது.

மேலும், பாதுகாப்பான கார்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இந்தியாவிற்கென பாரத் என்சிஏபி கடந்த ஆண்டு இறுதியில் துவங்கப்பட்டது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களில் பாதுகாப்பானவைகளாக தற்சமயம் பார்க்கப்படுபவை டாடா கார்களும், மஹிந்திரா கார்களும் ஆகும். ஏனெனில், க்ளோபல் என்சிஏபி கிராஸ் டெஸ்ட்டில் நிறைய டாடா மற்றும் மஹிந்திரா கார்கள் முழு 5 நட்சத்திரங்களை பெற்று அசத்தியுள்ளன.
இவை தவிர, ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன் கார்களும் 5 ஸ்டார்களை பெற்றுள்ளன. ஆனால், இவற்றிற்கு பிள்ளையார் சுழி அமைத்துக் கொடுத்தது, மஹிந்திராவின் எக்ஸ்யூவி300 ஆகும். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கார்களில் க்ளோபல் என்சிஏபி-இல் 5 ஸ்டார்களை பெற்ற முதல் கார் மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஆகும். இந்த மஹிந்திரா காரின் பாதுகாப்பை வெளிக்காட்டும் வகையில் தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரில் விபத்தில் சிக்கிய நபர், காரின் தரமான உடலமைப்பினாலும், காரினுள் வழங்கப்பட்டு இருந்த பாதுகாப்பு வசதிகளினாலும் கிட்டத்தட்ட மயிரிழையில் உயிர்தப்பி உள்ளார். இந்த விபத்தில் கார் தலைக்கீழாக குப்புற கவிழ்ந்துள்ளது. இருப்பினும், பெரியதாக எந்த பாதிப்பும் இன்றி சிறு, சிறு காயங்களுடன் இந்த நபர் உயிர் பிழைத்துள்ளார்.
காரின் பாதுகாப்பு தொழிற்நுட்பங்களையும், ஆனந்த் மஹிந்திராவின் லீடர்ஷிப்பையும் பாராட்டி குமார் என பெயர் கொண்ட அந்த நபர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அதிர்ஷ்டவசமாக, விபத்தில் இருந்து தப்பினேன். உறுதியான மஹிந்திரா எக்ஸ்யூவி300 காருக்காக ஆனந்த் மஹிந்திரா மற்றும் அவரது குழுவுக்கு நன்றி. இது பாதுகாப்பான கார் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூப்பிக்கிறது.

க்ளோபல் என்சிஏபி முடிவுகளில் என்னால் முழுவதுமாக உடன்பட முடியாது. நான் சீட்பெல்ட்டை சரியாக கட்டிக் கொண்டு வாகனம் ஓட்டினேன். என்னுடைய கைகளிலும், கால்களிலும் சிறிய கீறல்கள். ஓட்டுநர் இருக்கைக்கு அருகே இருந்த இருக்கையில் சீட் பெல்ட்டை அணிந்துக் கொண்டு இருந்த எனது மனைவி முதுகுத்தண்டு காயத்தில் இருந்து மீண்டு வருகிறார்.
விபத்துகள் நடக்கின்றன, எனவே: 1. திடமான கார்களை வாங்கவும். 2. சீட் பெல்ட்டை சரியாக அணியுங்கள். விரைவில் குணமடைய வாழ்த்திய அனைவருக்கும் நன்றி" என குறிப்பிட்டுள்ளார். மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரில் 6 ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள், கார்னர் பிரேக்கிங் கண்ட்ரோல் மற்றும் காரை முன் & பின்பக்கமாக பார்க் செய்வதற்கு உதவியாக சென்சார்கள் வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் சமீபத்தில்தான் எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ என்கிற பெயரில் அப்டேட் செய்யப்பட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பழைய எக்ஸ்யூவி300 காரையே இந்த அளவிற்கு பாதுகாப்பானதாக மஹிந்திரா உருவாக்கிய போது, நிச்சயமாக புதிய எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரும் வலிமையானதாகவே இருக்கும். என்னதான் பல்வேறு கிராஷ் டெஸ்ட்களில் கார் உட்படுத்தப்பட்டாலும், இவ்வாறான விபத்துகளின் போதுதான் காரின் நிஜ உலக தரம் தெரிய வருகிறது.


Click it and Unblock the Notifications









