10,000 கிலோ தங்கம் & பிளாட்டினத்தில் உருவாக்கம்... உலகின் விலைமிக்க உல்லாச படகு எது தெரியுமா?
படகுகளை நம்மில் பெரும்பாலானோர் நேரில் பார்த்திருப்பீர்கள். ஆனால் லக்சரி தரத்திலான உல்லாச படகுகளை அரிதாக பார்க்க முடியும். நம் இந்தியாவில் உல்லாச படகுகளை வைத்திருப்போரின் எண்ணிக்கை குறைவே. விலைமிக்க உல்லாச படகுகளில் பெரும்பாலானவை வெளிநாட்டினரிடம் தான் இருக்கிறது. அவற்றுள் மிகவும் விலைமிக்க 6 உல்லாச படங்களை இனி பார்க்கலாம்.
6. மோட்டார் யாச் ஏ: இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.3,600 கோடி விலை மதிப்புடையது. ப்லோம்+வோஸ் என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட லக்சரி உல்லாச படகான இது மொத்தம் 400 அடி நீளமுடையது. இந்த படகு தனி பயன்பாட்டிற்கு மட்டுமே ஏற்றது. அதாவது அதிக பேருடன் பயணிப்பதற்கு இது ஏற்றதாக இருக்காது. இந்த உல்லாச படகில் ஒரு பிரதான படுக்கையறை சுமார் 2,500 சதுர அடி பரப்பளவில் உள்ளது. அத்துடன் டிஸ்கோ ஹால் மற்றும் கண்ணாடி தரையை கொண்ட நீச்சல் குளம் உள்ளிட்டவையும் உள்ளன.

5. டோபஸ்: இதுவும் பிரைவேட் உல்லாச படகு தான். ஆனால் இந்த படகில் சற்று அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றி செல்ல முடியும். ஏனெனில் இந்த படகு மொத்தம் 482 அடி நீளத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலையாக 529 மில்லியன் டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் 4,209 கோடி ஆகும். இந்த லக்சரி உல்லாச படகு 2 வெவ்வேறான வடிவமைப்பாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் பேட், நீச்சல் குளம், சினிமா ஹால் என இந்த படகில் இடம்பெற்றுள்ள அம்சங்களில் எந்த குறையும் இல்லை.
4. அஸ்ஸாம்: உலகின் வேகமான படகாக விளங்கும் இதனை லூர்சென் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதன் விலை 600 மில்லியன் டாலர்கள் (ரூ.4,905 கோடி). இந்த விலைக்கு ஏற்ப படகு 590 அடி நீளத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகின் வேகமான படகாக புகழப்படுவதற்கு உறுதுணையாக இந்த உல்லாச படகில் 2 கேஸ் டர்பைன் என்ஜின்களும், 2 டீசல் என்ஜின்களும் உள்ளன. இவற்றின் மூலமாக அதிகப்பட்சமாக சுமார் 35,048 கிலோவாட்ஸ் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம்.

3. ஸ்ட்ரீட்ஸ் ஆஃப் மோனாகோ: 1 பில்லியன், அதாவது 100 கோடி டாலர்கள் இதன் விலையாகும். இந்திய ரூபாயில் ரூ.8,176 கோடி. இந்த வரிசையில் பலரை வசீகரிக்கக்கூடிய உல்லாச படகு இது எனலாம். ஏனெனில் அந்த அளவிற்கு நீரில் மிதக்கக்கூடிய ஒரு சிறிய நகரமாக இது விளங்குகிறது. மேலும், 1 பில்லியன் டாலர்களில் உருவாக்கப்பட்ட முதல் உல்லாச படகும் இதுதான். ஆனால் அதன்பின் இதனை காட்டிலும் விலைமிக்க 2 உல்லாச படகுகள் உலகில் உருவாக்கப்பட்டுவிட்டன. அவை...
2. எக்ளிப்ஸ்: நீளம் 536 அடி என்றாலும், உலகின் மிக பெரிய உல்லாச படகாக இது வர்ணிக்கப்படுகிறது. இதன் விலை 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.12,264 கோடி). இந்த படகின் சிறப்பம்சம், இதில் இடம்பெற்றுள்ள பாதுகாப்பு அம்சங்களாகும். பிரைவேட் பாதுகாப்பு அமைப்பு மற்றும் புல்லட் ஃப்ரூஃப் ஜன்னல் கண்ணாடிகள் மட்டுமின்றி, கேமிரா கண்டறிவானும் இந்த உல்லாச படகில் அமைந்துள்ளது. இந்த படகை யாராவது படம் பிடித்தால் கூட படகில் இருந்து ஒரு ஒளி சென்று அவர்களை படம் எடுக்கவிடாமல் தடுக்கும்.

1. ஹிஸ்டரி சுப்ரீம்: தற்போதைக்கு உலகிலேயே மெகா லக்சரி உல்லாச படகு இதுதான். இதன் இடத்தை இன்னும் சில வருடங்களுக்கு வேறெந்த உல்லாச படகும் பிடிக்காது என்றே நினைக்கிறோம். ஏனெனில் அந்த அளவிற்கு, சுமார் ரூ.40 ஆயிரம் கோடி செலவில் இந்த உல்லாச படகை உருவாக்கியுள்ளனர். இந்த படகின் உருவாக்கத்திற்கு 10,000 கிலோ தங்கம் மற்றும் பிளாட்டினம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படகின் நீளம் வெறும் 100 அடி மட்டுமே.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்த 6 உல்லாச படகில் ஏதேனும் ஒன்றை நேரில் பார்த்திருந்தால் கூட நீங்கள் உங்கள் வாழ்நாள் பலனை அடைந்து வீட்டீர்கள் என்றே அர்த்தம். அதுவே, ஏதேனும் ஒன்றில் பயணித்திருக்கீர்கள் எனில், நீங்கள் நிச்சயம் ஓர் அதிர்ஷ்டசாலி. குறிப்பாக, கடைசியாக பார்த்த, ஹிஸ்டரி சுப்ரீம் வெறும் 100 அடி நீளத்தில் தங்கம் மற்றும் பிளாட்டினத்தில் உருவாக்கப்பட்டு இருப்பது மிகவும் ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.
Source: LuxuryProperty


Click it and Unblock the Notifications









