பளபளக்கும் புதிய டிஃபெண்டர் காருக்குள் இருப்பது இந்த சாமியாரா? காரை புதுசா வாங்கிட்டார் போல - விலை ரூ.1.5 கோடி
பாபா ராம்தேவ் (Baba Ramdev) சுமார் ரூ.1.5 கோடி மதிப்பிலான சொகுசு எஸ்யூவி காரில் காட்சி தந்துள்ளார். ரூ.1.5 கோடி மதிப்பில் அப்படி எந்த பிராண்டின் காரை இவர் புதியதாக வாங்கியுள்ளார் என்பதை பற்றியும், இதுகுறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவையும் இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
பாபா ராம்தேவ், இந்த பெயரை இணையத்தில் அடிக்கடி கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்து சமய துறவியான பாபா ராம்தேவ்வின் உண்மையான பெயர் ராம்கிருஷ்ணா யாதவ். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் யோகா வகுப்புகளை நடத்திவரும் இவர், பதாஞ்சலி ஆயுர்வேத பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் நாடு முழுவதும் பலரால் அறியப்படும் நபரானார்.

பாபா ராம்தேவ் தனது போக்குவரத்துக்கு மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை பயன்படுத்தி வந்தார். இந்த மஹிந்திரா கார் கடந்த 2021ஆம் ஆண்டின் இறுதியில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. எக்ஸ்யூவி700 சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு 2 வருடங்கள் கூட முழுவதுமாக நிறைவடையாத நிலையில், பாபா ராம்தேவ் தனது அன்றாட போக்குவரத்துக்கான காரை எக்ஸ்யூவி700-இல் இருந்து லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 130 ஆக மாற்றி கொண்டுள்ளார்.
பாபா ராம்தேவ் புதிய டிஃபெண்டர் 130 காரை இயக்கி பார்க்கும் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது. அதனை கீழே காணலாம். இந்த வீடியோவில் பாபா ராம்தேவ்வின் டிஃபெண்டர் காரில் நம்பர் பிளேட் எதுவும் பொருத்தப்பட்டு இல்லாததை காணலாம். அதாவது, கார் நேராக ஷோரூமில் இருந்து கொண்டுவரப்பட்டது போல் உள்ளது. செடோனா சிவப்பு நிறத்தில் டிஃபெண்டர் 130 காரை பாபா ராம்தேவ் வாங்கியுள்ளார்.
இந்தியாவில் 2023 டிஃபெண்டர் 130 காரை இந்த 2023ஆம் ஆண்டின் துவக்கத்தில் தான் லேண்ட் ரோவர் நிறுவனம் அறிமுகம் செய்து இருந்தது. அளவில் சற்று சிறியதான டிஃபெண்டர் 110 மாடல் அறிமுகம் செய்யப்படவில்லை. அறிமுகம் செய்யப்பட்டு, சில நாட்களிலேயே டிஃபெண்டர் 130 காரின் டெலிவிரிகள் துவங்கின. இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.1.3 கோடியில் இருந்து ரூ.1.41 கோடி வரையில் உள்ளன.
பாபா ராம்தேவ் டிஃபெண்டர் 130 காரின் எந்த வேரியண்ட்டை வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை. டிஃபெண்டர் 130 மாடலிலும், டிஃபெண்டர் 110 மாடலிலும் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் ஒரே அளவுதான். ஏனெனில் இவை இரண்டும் ஒரே பிளாட்ஃபாரமை அடிப்படையாக கொண்டே உருவாக்கப்படுகின்றன. ஆனால், டிஃபெண்டர் 130 காரில் 3வது வரிசை இருக்கைகள் வழங்கப்படுவதால் காரின் ஒட்டு மொத்த நீளமானது 340மிமீ அதிகம் ஆகும்.

2023 லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 130 காரின் தோற்றத்தை பொறுத்தவரையில், இந்த எஸ்யூவி காரின் வெளிப்பக்கத்தில் சிங்கிள்-பேட் எல்இடி ஹெட்லேம்ப்களுடன் எல்இடி டிஆர்எல்-கள், பனோராமிக் சன்ரூஃப், 20-இன்ச் அலாய் சக்கரங்கள் மற்றும் ஸ்மோக்டு டெயில்லேம்ப்கள் வழங்கப்படுகின்றன. காரின் உட்புறத்தில் 11.4-இன்ச்சில் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் திரை, 4-நிலை ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் இடம்பெறுகிறது.
லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 130 காரை மொத்தம் 2 விதமான என்ஜின் தேர்வுகளில் வாங்கலாம். இதில் 3.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 394 பிஎச்பி மற்றும் 550 என்எம் டார்க் திறன் வரையிலும், 3.0 லிட்டர் டீசல் என்ஜின் 296 பிஎச்பி மற்றும் 600 என்எம் டார்க் திறன் வரையிலும் இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன. இந்த இரு என்ஜின்களுடனும் மைல்ட்-ஹைப்ரீட் தொழிற்நுட்பம் மற்றும் 4-சக்கர-டிரைவ் சிஸ்டத்தை பெறலாம்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: நாளுக்கு நாள் பிரபலமாகி வருவதாலோ என்னவோ பாபா ராம்தேவ் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் இருந்து டிஃபெண்டர் 130 காருக்கு மாறியுள்ளார். இந்த டிஃபெண்டர் கார் ஆனது நன்கு நீளமானது. குறிப்பாக, பின் இருக்கை வரிசையில் நன்கு விசாலமான இடவசதி கிடைக்கிறது. ஆதலால் பாபா ராம்தேவ் காருக்கு உள்ளே கூட கை, கால்களை மடக்கி, நீட்டி யோகா செய்யலாம்.


Click it and Unblock the Notifications