நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் வாய் பிளந்து பார்த்தாங்க!! இந்திய தொழிலதிபர் வாங்கியிருக்கும் புது ரோல்ஸ்-ராய்ஸ் கார்
யோகன் பூனாவல்லா (Yohan Poonawalla), இந்தியாவின் மிக பெரும் பணக்காரர்களுள் ஒருவர். அத்துடன், லக்சரி கார்களை வாங்கி பயன்படுத்துவதிலும் ஆர்வம் கொண்டவரான யோகன் பூனாவல்லா சமீபத்தில் மிக விலையுயர்ந்த ரோல்ஸ்-ராய்ஸ் ஸ்பெக்டர் என்ற எலக்ட்ரிக் சூப்பர் லக்சரி காரை வாங்கினார். இந்த நிலையில், இந்த ரோல்ஸ்-ராய்ஸ் எலக்ட்ரிக் காரின் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இதுதொடர்பான இன்ஸ்டாகிராம் பதிவை இனி பார்க்கலாம்.
ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்தின் கார்கள் உலகளவில் பிரபலமானவை என்பதை நான் கூற வேண்டியது இல்லை. கம்பீரமான தோற்றத்தினாலும், நுணுக்கமான வேலைப்பாடுகளினாலும் மற்ற லக்சரி கார்களில் இருந்து ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் தனித்து தெரிகின்றன. அத்தகைய ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்தில் இருந்து முதல் எலக்ட்ரிக் காராக ஸ்பெக்டர் கடந்த 2022ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த எலக்ட்ரிக் காரை இந்திய தொழிலதிபர் யோகன் பூனாவல்லா வாங்கியுள்ளதாக சில தினங்களுக்கு முன் செய்திகள் வெளிவந்தன. இருப்பினும், பூனாவல்லா வாங்கிய ஸ்பெக்டர் காரின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில் தற்போது, பூனாவல்லாவின் ஸ்பெக்டரின் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, தனது இந்த புதிய ரோல்ஸ்-ராய்ஸ் காரை காட்டுவதற்காகவே பூனாவல்லா மக்களை அழைத்து ஓர் சிறிய நிகழ்ச்சி போல் ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த நிகழ்ச்சி தொடர்பான படங்களின் மூலம், பூனாவல்லா தனது ஸ்பெக்டர் எலக்ட்ரிக் காரை மிகவும் கிளாஸியான தோற்றத்தில் வாங்கியிருப்பது தெரியவருகிறது. இந்த எலக்ட்ரிக் கூபே செடான் காரை ரோல்ஸ்-ராய்ஸின் பிரத்யேகமான சார்ட்ரூஸ் நிறத்தில் யோகன் பூனாவல்லா வாங்கியுள்ளார். இது தங்கம் மற்றும் வெண்கலத்தின் நிறங்கள் கலந்த கலவையாக உள்ளது. இந்த பெயிண்ட்டிற்காக நிச்சயமாக பல லட்ச ரூபாய்கள் இவருக்கு செலவாகி இருக்கும்.

காருக்கு உள்ளே கேபின் முழுவதுமாக வெள்ளை நிறத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பூனாவல்லாவின் ஸ்பெக்டர் காரின் உட்பக்கத்தை விவரிக்கும் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இதனால், என்னென்ன அம்சங்களை இவர் தேர்வு செய்துள்ளார் என்பதை அறிய முடியவில்லை. காருக்கு வெளியே சக்கரங்களை மிக பெரியதாக பூனாவல்லா தேர்வு செய்துள்ளார். எந்த அளவிற்கு பெரியது என்றால், சுமார் 23-இன்ச் டைமண்ட்-கட் ஏரோ பிளேட்-ஸ்டைல் அலாய் சக்கரங்கள் இந்த காரில் பொருத்தப்பட்டு உள்ளன.
இந்த சக்கரங்கள் காரின் செயல்படுதிறனில் முக்கிய பங்கு வகிக்கும் என ரோல்ஸ்-ராய்ஸ் தெரிவிக்கிறது. இந்த சூப்பர் லக்சரி எலக்ட்ரிக் காரில் மிக பெரிய 102kWh பேட்டரி பேக் பொருத்தப்படுகிறது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால், அதிகப்பட்சமாக 530கிமீ தொலைவிற்கு காரை இயக்கி செல்லலாம். ஸ்பெக்டர் காரில் முன்பக்கத்தில் ஒன்று, பின்பக்கத்தில் ஒன்று என இரு எலக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்படுகின்றன.

இந்த எலக்ட்ரிக் மோட்டார்கள் சுமார் 575 பிஎச்பி மற்றும் 900 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை காருக்கு வழங்கக்கூடியதாக உள்ளன. 2022ஆம் ஆண்டிலேயே ஸ்பெக்டர் காரை இந்தியாவில் ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்திவிட்டது என்றாலும், சில மாதங்களிலேயே இந்த காரின் விற்பனை நிறுத்திக் கொள்ளப்பட்டது. அதன்பின், சிறிய இடைவெளிக்கு பிறகு இந்த 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து மீண்டும் ஸ்பெக்டரின் விற்பனை துவங்கியுள்ளது.
யோகன் பூனாவல்லாவின் கேரேஜில் ஏற்கனவே ரோல்ஸ்-ராய்ஸ் பாண்டோம், ட்ராப்ஹெட் கூபே மற்றும் சில பழமையான ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் கூட உள்ளன. அவற்றுடன் ரூ.8 கோடி மதிப்பிலான இந்த முதல் ரோல்ஸ்-ராய்ஸ் எலக்ட்ரிக் காரும் இணைந்துள்ளது. ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் மட்டுமின்றி, ஃபெராரி, பெண்ட்லீ, லம்போர்கினி மற்றும் மற்ற அல்ட்ரா-லக்சரி கார்களும் பூனாவல்லாவிடம் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: யோகன் பூனாவல்லா போன்ற பெரும் தொழிலதிபருக்கு புதியதாக ரோல்ஸ்-ராய்ஸ் காரை வாங்குவது ஒன்றும் பெரிய விஷயமாக இருக்காது. ஆனால், இவர் கொஞ்சம் வித்தியாசமாக யோசித்து எலக்ட்ரிக்கில் ரோல்ஸ்-ராய்ஸ் காரை வாங்கி உள்ளார். அதுவும், ரோல்ஸ்-ராய்ஸின் முதல் எலக்ட்ரிக் கார் இதுதான். ஸ்பெக்டர் ஓட்டுவதற்கு எப்படி இருக்கு? வேறு ஏதேனும் பிரச்சனைகள் உள்ளனவா? என்ற விபரங்கள் இன்னும் முழுமையாக வெளிவந்திருக்காத நிலையில், பூனாவல்லா தைரியமாக இந்த காரை வாங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications









