விமானியே நினைத்தாலும் நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முடியாது! இதுக்கு பின்னாடி இப்படி ஒரு அறிவியல் காரணமா?
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது அதன் மெயின் கதவை யாராவது திறந்தால் என்னவாகும் என யோசித்துள்ளீர்கள்? அதற்கான பதிலைக் காணலாம் வாருங்கள்.

விமானம் என்பது ஏகப்பட்ட தொழிற்நுட்பத்தை உள்ளடக்கியது. பூமியிலிருந்து சுமார் 30 -40 ஆயிரம் அடிக்கு மேல் சென்றுவிட்டு மீண்டும் பூமிக்குத் தரையிறங்குவது ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல. அப்படிச் செய்யும் போது அதன் பின்னால் ஏகப்பட்ட அறிவியல் விஷயங்களைப் பற்றி ஆராய வேண்டியது உள்ளது. இதையெல்லாம் செய்து தான். ஒரு விமானம் தயாராகிறது.

விமானம் வானில் பறக்கும் போது எந்த விதமான இடையூறுகளும் மக்களுக்கு ஏற்படக்கூடாது என்பதை மனதில் வைத்துப் பல தொழிற்நுட்பங்கள் இதில் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் விமானங்கள் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது விமானத்தின் கதவுகள் திறந்துவிட்டால் என்ன ஆகும் என்ற பயம் இருக்கிறது. இதைப்பற்றித்தான் இந்த பதிவில் விளக்கமாகக் காணப்போகிறோம்.

இதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் விமானங்களில் கதவுகளைப் பற்றி முழுமையாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும். விமானத்தில் உள்ள பகுதிக்கும் வெளிப்பகுதிக்கும் உள்ள ஒரு பகுதி விமானத்தின் கதவுகள் தான். ஒரு கமர்ஷியல் விமானத்தில் கதவு என்பது விமானத்தின் முன்பக்கம், விமானத்தின் பின்பக்கம் மற்றும் சரக்குகளை ஏற்றி இறங்கும் பகுதி என மூன்று இடத்தில் இருக்கும். விமானத்தின் அளவுகளைப் பொருத்து எண்ணிக்கை மாறுபடும்.

விமானத்தில் பணியாற்றுபவர்களுக்கு நன்கு தெரியும் விமானத்தின் கதவுகள் விமானம் தரையிலிருக்கும் போது மட்டுமே திறந்திருக்க வேண்டும் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது விமானத்தின் கதவுகள் திறந்தால் அவ்வளவு தான் அங்கேயே அந்த விமானத்தை மறந்துவிட வேண்டியது தான். கண்டிப்பாக அந்த விமானம் விபத்தில் சிக்கிவிடும்.

இதனாலேயே விமானிகள் விமானத்தை எடுக்கும் முன்பே அதன் கதவுகள் எல்லாம் லாக் செய்யப்பட்டதை உறுதி செய்து கொள்வார்கள். அதன் பின்பு தான் விமானத்தை நகர்த்துவார்கள். இது போக மற்றொரு விஷயத்தையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இன்று இருக்கும் நவீன ரக விமானங்கள் அதிகபட்சமாகப் பூமியிலிருந்து சுமார் 36 ஆயிரம் அடிக்கு மேல் பறக்கும் திறன் கொண்டது.

அறிவியலின்படி கடல் மட்டத்திற்கு மேல் 8 ஆயிரம் மீட்டர் அதாவது 26,247 அடிக்கு மேல் ஒரு மனிதன் சென்றால் அவனால் அங்கிருக்கும் காற்றைச் சுவாசித்து உயிர் வாழ முடியாது எனச் சொல்கிறது. உயரம் சொல்லச் செல்ல காற்றின் அழுத்தம் குறையும். அப்படி என்றால் காற்றில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு குறையும்.

உயரம் செல்ல செல்ல நம் உடலுக்கு அதிகமாகக் காற்று தேவைப்படும். சிலருக்கு மலைப் பிரதேசங்களுக்குச் சென்றாலே மூச்சு முட்டுகிறது அல்லவா அதற்கு இது தான் காரணம் 8 ஆயிரம் மீட்டருக்கு மேல் உள்ள காற்றில் மனித உடலுக்குத் தேவையான அளவை விட ஆக்ஸிஜன் குறைந்துவிடுவதால் அது தான் லிமிட் அதற்கு மேல் செல்ல வேண்டும் என்றால் செயற்கை ஆக்ஸிஜன் தான் வேண்டும்.

இதனால் விமானங்கள் புறப்படும் முன்பு விமானங்கள் விமானங்களில் கதவுகளைப் பூட்டி லாக் செய்வார்கள். அதன் பின்பு விமானத்தை பிரஷரைஷ் செய்வார்கள்.

இதனால் விமானங்கள் உயரமாகப் பறந்தாலும் விமானத்திற்குள்ளே போதுமான அளவு பிரஷர் இருக்கும் இதனால் பயணிகள் எந்த வித தொந்தரவும் இல்லாமல் பயணிக்க முடியும்.

நாம் முன்பு சொன்னது போல விமானிகளிடம் இருக்கும் லாக் எல்லாம் விமானம் தரையில் இருக்கும் போது விமானத்தின் கதவைத் திறக்காமல் இருப்பதற்கான லாக் தான். விமானம் குறிப்பிட்ட அளவிற்கு மேல் பறக்கும் போது எந்த கொம்பன் நினைத்தாலும் விமானத்தின் கதவுகளைத் திறக்க முடியாது.

ஏன் என்றால் விமானத்தின் கதவுகளுக்கு வெளியே மிகக் குறைவான பிரஷர் இருக்கும். விமான கதவுகளுக்கு உள்ளே அதிகமான பிரஷர் இருக்கும். குறைவாக உள்ள பிரஷர் அதிகமாக இருக்கும் பிரஷர் இருக்கும் இடத்தில் அழுத்தம் தரும், இப்படியாக விமானம் ஒரு 36000 அடி உயரத்தில் பறக்கிறது என வைத்துக்கொள்வோம். அப்பொழுது விமானத்தை சுற்றிலும் ஒரு சதுர இன்ச் இடத்தில் 3.6 கிலோ அளவிற்கு அழுத்தம் இருக்கும்.

அப்படி என்றால் சராசரியாக ஒரு விமானத்தின் உயரம் 6 அடியும் அகலம் 3.5 அடியும் இருக்கும் அப்படி என்றால் 21 சதுரடி பரப்பளவிற்கு விமானத்தின் கதவு இருக்கும் இதில் ஒரு சதுர இன்ச்சிற்கு 3.6 கிலோ என்றால் சுமார் 21 சதுரடிக்கு மொத்தம் 10,880 கிலோ அளவிற்கு எடை இருக்கும்.

இந்த உலகில் அதிகபட்சமாக ஒரு மனிதன் 500 கிலோ எடைவரையில் தான் தூக்க முடிந்தது. இதில் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது என்னவென்றால் விமானத்தின் கதவுகள் பெரும்பாலும் விமானத்தின் வெளிப்புறத்தில் திறக்கும்படி தான் இருக்கும்.

அதனால் விமானம் நடுவானில் பறக்கும் போது விமானத்தின் கதவுகளைத் திறப்பது முடியாத காரியம். அப்படி இருந்ததும் சில நேரங்களில் இதற்கான முயற்சி நடந்துள்ளது. பாகிஸ்தான் விமானத்தில் ஒருவர் தூக்கக் கலக்கத்தில் பாத்ரூம் கதவு என நினைத்து மெயின் கதவைத் திறக்க முயன்றுவிட்டார். அதற்காக விமானம் தரையிறக்கப்பட்டது.

சுமார் 7 மணி நேர விசாரணைக்குப் பின்பு மீண்டும் விமானம் புறப்பட்டது. அதனால் விமானத்தில் பயணிக்கும் போது நடுவானில் விமானத்தின் கதவை யாராவது திறந்துவிட்டால் என்ன நடக்கும் எனப் பயப்பட வேண்டாம். அப்படி எதுவும் நடக்காது. அதற்காக நீங்கள் நடுவானில் விமானம் பறக்கும் போது மெயின் கதவைத் திறக்க முயற்சிக்க வேண்டாம்.


Click it and Unblock the Notifications








