இந்தியாவிலேயே இருந்திருந்தா இதெல்லாம் சாத்தியம் ஆகியிருக்குமா? செகண்ட்-ஹேண்ட் காராக இருந்தாலும் இது வேற லெவல்!
புதிய கார் வாங்குவது என்பது நம் அனைவருக்குமே ஒரு சிறப்பு வாய்ந்த தருணம் ஆகும். பொதுவாக, தங்களின் முதல் காராக எளிதாக ஓட்டக்கூடிய சிறிய அளவிலான மற்றும் பராமரிப்பு செலவு குறைவான கார்களையே பெரும்பாலானோர் விரும்புவர். கார் ஓட்டுவதில் போதிய அளவிற்கு அனுபவம் இல்லாததால் ஏற்படும் விபத்துகளில் இருந்து தற்காத்துக் கொள்ள குறைந்த செலவிலான கார்களைத் தேர்ந்தெடுப்பதே பலரது வழக்கம்.
விலையுயர்ந்த, உயர் செயல்திறன் கொண்ட கார்கள் அல்லது எஸ்யூவி (SUV) கார்களை வாங்குவது பெரும்பாலும் படிப்படியாகவே நிகழும். ஆனால், துபாயில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர் இந்த வழக்கத்தை உடைத்து, தனது முதல் காராக போர்ஷே 911 கரேரா எஸ் (Porsche 911 Carrera S) காரை வாங்கி அசத்தியுள்ளார்.

இந்த ஐகானிக் ஸ்போர்ட்ஸ் காரை டெலிவரி (Delivery) பெற்றுள்ள முதல் இந்திய பெண் என்கிற பெருமையை பெற்றுள்ள இவர், ஃபிட்ஸ் துபாய் (Fitze Dubai) நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை இயக்க அதிகாரியுமான தொழிலதிபர் நேகா உபாத்யாய் சாமுவேல் (Neha Upadhyay Samuel) ஆவார்.
அவர் தனது குடும்பத்துடன் இணைந்து இந்த காரை டெலிவரி பெற்றுள்ளார். ஆனால், நேகா உபாத்யாய் சாமுவேல் வாங்கியிருப்பது போர்ஷே 911 கரேரா எஸ் மாடலின் முந்தைய தலைமுறை காரை ஆகும். இது, '991.2' தலைமுறை என்று அழைக்கப்படுகிறது. இது 2011-ல் அறிமுகமான 991 தலைமுறையின் இடைக்கால மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும்.

2016ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட போர்ஷே 911 காரின் இந்த மேம்படுத்தப்பட்ட பதிப்பின் உற்பத்தியும் 2019-ல் முடிவடைந்தது. இதனால் இந்த போர்ஷே கார் தற்சமயம் எந்த நாட்டிலும் விற்பனையில் இல்லை. எனவே தான், நேகா உபாத்யாய் சாமுவேல் தனது 911 கரேரா எஸ் காரை செகண்ட் ஹேண்ட் கார் (Second-hand Car) மார்க்கெட்டில் இருந்து வாங்கியுள்ளார்.
பெண் தொழிலதிபர் நேகா உபாத்யாய் சாமுவேல் வாங்கியிருக்கும் போர்ஷே 911 கரேரா எஸ் காரின் இருக்கைகள் பர்கண்டி என்கிற பிரத்யேகமான அடர் சிவப்பு நிறத்தில் கவர்ச்சிகரமான வடிவமைப்பைக் கொண்டுள்ளன. போர்ஷே 991.2 தலைமுறையின் முக்கிய அம்சம் அதன் என்ஜின் ஆகும். இது கரேரா கார்கள் வரிசையில் டர்போசார்ஜ்டு என்ஜின்களின் அறிமுகத்தை துவங்கி வைத்தது.
முன்பு பயன்பாட்டில் இருந்த 3.4 லிட்டர் மற்றும் 3.8 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் (NA) என்ஜின்களுக்கு பதிலாக, சிறிய 3.0 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ் செய்யப்பட்ட பிளாட்-6 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாற்றம் நீண்ட காலமாக ஸ்போர்ட்ஸ் கார்களை பயன்படுத்தி வந்தவர்களுக்கு முதலில் ஏற்புடையதாக இல்லை.

எனினும், அடுத்த ஆண்டுகளில், போர்ஷே ரசிகர்கள் இந்த 'புதிய என்ஜினுக்கு' பழகிக் கொண்டனர். 911 டர்போ மற்றும் டர்போ எஸ் கார்களில் பெரிய 3.8 லிட்டர் ட்வின்-டர்போ பிளாட்-6 சிலிண்டர் என்ஜின் இரு வெவ்வேறு செயல்திறன் நிலைகளில் இடம்பெற்றது. தற்போது நேகா உபாத்யாய் சாமுவேல் வாங்கியிருக்கும் கரேரா எஸ் மாடல் ஆனது என்ட்ரி-லெவல் கரேராவை விட அதிக சக்தி வாய்ந்தது.
இது அதிகப்பட்சமாக 420 hp மற்றும் 500 Nm டார்க்கில் இயங்கக்கூடியதாக உள்ளது. 7-ஸ்பீடு டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் ரியர் வீல் டிரைவ் (RWD) லேஅவுட்டை கொண்டது. ஸ்போர்ட் க்ரோனோ பேக்கேஜுடன், 991.2 கரேரா எஸ் கார் 0- 100 கிமீ வேகத்தை வெறும் 3.9 வினாடிகளில் எட்ட கூடியது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நேகா உபாத்யாய் சாமுவேல் ஒரு பெண் தொழிலதிபர் மட்டுமில்லை, உடற்பயிற்சி ஆர்வலர் மற்றும் சமூக ஊடகங்களில் பிரபலமானவரும் ஆவார். இதுவே இவரை மார்க்கெட்டில் பிரபலமான போர்ஷே காரை வாங்க வைத்துள்ளது. இந்த போர்ஷே கரேரா எஸ் காரை தனது முதல் காராக வாங்கியதற்கான தனது நீண்ட, உணர்வுபூர்வமான மற்றும் உத்வேகம் தரும் கதையைப் பகிர்ந்துக் கொண்டதில் இருந்து இவர் எந்த அளவிற்கு இந்த காரை வாங்குவதில் ஆர்வம் காட்டியுள்ளார் என்பதை அறிய முடிகிறது.


Click it and Unblock the Notifications









