சன்ரூஃப் கார் வைத்திருக்கும் பலருக்கு இது தெரிவதில்லை - அபராதத்தில் சிக்காதீர்கள்... உஷார்!!
கார்களில் சன்ரூஃப் எதற்காக வழங்கப்படுகிறது என்பதே நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். கார் நின்றிருக்கும் போது பயன்படுத்துவதற்காக மட்டுமே சன்ரூஃப் வழங்கப்படுகிறது. கார் இயக்கத்தில் இருக்கும்போது சன்ரூஃப்-ஐ திறந்து வைத்துக் கொள்ளாலாம். ஆனால், அதன் வழியாக எட்டிப் பார்த்தவாறு பயணிப்பது ஆபத்தானது ஆகும். இதனால், இவ்வாறு பயணம் செய்வோருக்கு போலீசார் அபராதம் விதிக்கின்றனர். இந்த நிலையில், சிறுவர்கள் காரின் சன்ரூஃப் வழியாக எட்டிப் பார்த்தப்படி பயணம் செய்துக் கொண்டிருக்க, பெங்களூரில் ஒருவர் தனது காரை ஓட்டி சென்றுள்ளார்.
காரின் மேற்கூரையில் ஜன்னல் போன்று வழங்கப்படுவது சன்ரூஃப் ஆகும். சன்ரூஃப்கள் காரை பொறுத்து ஒவ்வொரு விதமான வகைகளில் வழங்கப்படுகின்றன. அதாவது, விலை குறைவான கார்களில் எளிமையானதாகவும், விலையுயர்ந்த சொகுசு கார்களில் பிரம்மாண்டமானதாகவும் சன்ரூஃப்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், சன்ரூஃப் எவ்வளவு பிரம்மாண்டமானதாக வழங்கப்பட்டாலும் சரி, கார் இயக்கத்தில் இருக்கும் போது அதன் வழியே எட்டிப் பார்ப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இந்திய மோட்டார் வாகன சட்டம் பிரிவு 184 மற்றும் 177-இன் கீழ் இத்தகைய செயல் குற்றமாக வரையறை செய்யப்பட்டுள்ளது. கார் இயக்கத்தில் இருக்கும்போது, காருக்குள் அனைவரும் கட்டாயமாக இருக்கைகளில் அமர்ந்திருக்க வேண்டும். மேலும், முறையாக சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும். சன்ரூஃப் வழியாக எட்டிப் பார்த்தப்படி செல்லும்போது நிச்சயமாக சீட் பெல்ட் அணிந்திருக்க முடியாது என்பதால், இந்த செயலை தண்டனைக்குரியமாக குற்றமாக வரையறை செய்துள்ளனர்.
ஆனால், இதையெல்லாம் தெரியாத கியா கேரன்ஸ் கார் உரிமையாளர் ஒருவர் கார் இயக்கத்தில் இருக்கும்போது சிறுவர்களை சன்ரூஃப் வழியாக எட்டிப் பார்த்தப்படி பயணம் செய்ய அனுமதித்துள்ளார். பெங்களூரில் நடந்துள்ள இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, வீடியோவை ஆதாரமாக வைத்து சம்பந்தப்பட்ட கார் ஓட்டிக்கு பெங்களூர் போலீசார் அதிரடியாக அபராதம் விதித்துள்ளனர்.

சுகேஷ் எஸ் சுவர்னா என்பரால் கடந்த ஜூன் 24ஆம் தேதி எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், பெங்களூரின் பரபரப்பான சாலை ஒன்றில் சென்றுக் கொண்டிருக்கும் இந்த கியா கேரன்ஸ் காரின் சன்ரூஃப் வழியாக இரு சிறுவர்கள் எட்டிப் பார்த்தப்படி பயணம் செய்வதை பார்க்க முடிகிறது. இரவு நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த வீடியோவில், சம்பந்தப்பட்ட கேரன்ஸ் கார் செல்லும் சாலையில் வாகனங்கள் அதிகமாக செல்வதை காணலாம்.
இதுகுறித்து சுகேஷ் எஸ் சுவர்னா தனது எக்ஸ் பதிவில், "இதனாலேயே இந்தியர்களாகிய நாம் கார்களில் சன்ரூஃப் போன்ற அம்சங்களை கொண்டிருக்கவில்லை. மூளையில்லாத மற்றும் அறிவற்ற பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் இதை செய்கிறார்கள்! அதுவும் அதிக போக்குவரத்து நெரிசலில், சடர்ன் பிரேக்கிங்கின் போது ஆபத்து மிக அதிகமாக இருக்கும். இது பெங்களூரின் மாரத்தஹள்ளி வெளிவட்ட சாலையில் எடுக்கப்பட்டது" என கூறியதோடு, பெங்களூர் நகர போலீசாரையும் டேக் செய்துள்ளார்.

இதனையடுத்து, இந்த வீடியோவை கண்ட பெங்களூர் போலீசார் வாகன பதிவெண்ணை கொண்டு சம்பந்தப்பட்ட கியா கேரன்ஸ் கார் உரிமையாளரை அடையாளம் கண்டு, நேரில் வரவழைத்து அபராதம் விதித்துள்ளனர். இதுதொடர்பான படத்தையும், அந்த கார் ஓட்டிக்கு விதிக்கப்பட்ட அபாரத செல்லானின் படத்தையும் சுகேஷ் எஸ் சுவர்னாவின் எக்ஸ் பதிவிற்கு கீழே கமெண்ட் பாக்ஸில் காணலாம்.
சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிக்கு ரூ.1,000 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதன்மை போலீசார் அதிகாரி ஒருவர் கூறுகையில், "நகரும் கார் அல்லது எஸ்யூவியின் சன்ரூஃப்பில் இருந்து வெளியே எட்டி பார்க்க யாரையாவது அனுமதிப்பது பாதுகாப்பற்ற ஓட்டுநர் பயிற்சியாக கருதப்படுகிறது" என்றார். இதேபோன்று, சமீப காலங்களில் பல்வேறு சம்பவங்கள் நம் இந்தியாவில் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: காரில் சன்ரூஃப் இருந்தால் ஜாலியாக வெளியே எட்டிப் பார்த்தப்படி பயணம் செய்யலாம் என்பதற்காகவே இவ்வாறான கார்களை பலர் வாங்குகின்றனர். ஆனால், அவ்வாறு பயணம் செய்வதில் உள்ள ஆபத்துகளை பலர் உணர்வதில்லை. சுகேஷ் எஸ் சுவர்னா கூறியதுபோல், சன்ரூஃப் வழியாக எட்டி பார்ப்பவர்களுக்கு ஒரு சடர்ன் பிரேக் பெரிய காயத்தை உண்டாக்கலாம். இவ்வளவு ஏன், சன்ரூஃப் வழியாக எட்டி பார்ப்பவர்கள் சீட் பெல்ட் அணியாததால் வெளியே தூக்கிக் கூட வீசப்படலாம்.


Click it and Unblock the Notifications









