இவ்வளவு சிறிய வயதில் 40 லட்ச ரூபாய் காருக்கு சொந்தக்காரர்!! இளம் நடிகரின் புதிய ஸ்கோடா கார்...
இவ்வளவு இளம் வயதில் விலைமிக்க காரை வாங்கியுள்ளாரா என ஆச்சரியப்பட வைக்கும் வகையில் மலையாள இளம் நடிகர் ஒருவர் ஸ்கோடா சூப்பர்ப் காரை டெலிவிரி எடுத்துள்ளார். யார் அந்த இளம் மலையாள நடிகர்? அவர் வாங்கியிருக்கும் ஸ்கோடா சூப்பர்ப் காரில் அப்படி என்ன சிறப்பம்சங்கள் உள்ளன? என்பதை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
சினிமாவில் எப்படியாவது கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பை பெற்றுவிட்டால் விரைவாகவே கோடீஸ்வரர் ஆகிவிடலாம் என்கிற எண்ணம் இப்போது அல்ல, எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் இருந்தே இருக்கிறது. இதன் காரணமாகவே கிராமங்களில் இருந்து இளைஞர்கள் பலர் சினிமா வாய்ப்பை தேடி பட்டணத்திற்கு வந்துள்ளனர்.

ஆனால், சினிமா வாய்ப்பை தேடி அவ்வாறு நகரத்திற்கு வந்தவர்கள் எல்லாராலும் நடிகர்களாகிவிட முடிவதில்லை. மிகவும் சிலர் மட்டுமே சினிமாவில் ஹீரோ ஆகின்றனர். சிலர், பல வருடங்களாக சினிமா வாய்ப்புக்காக காத்திருப்பர். ஆனால் சிலரோ இளம் வயதிலேயே படத்தின் ஹீரோ வாய்ப்பை பெற்றிருப்பர். அவ்வாறு இளம் வயதிலேயே ஹீரோவாகியவர் தான் நஸ்லென் கே காஃபோர்.
மலையாள நடிகரான இவருக்கு 23 வயது மட்டுமே ஆகிறது. அதற்குள் 10க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துவிட்ட நஸ்லென் முதன்முறையாக கதாநாயகனாக நடித்துள்ள ஜார்னி ஆஃப் லவ் 18+ என்ற மலையாள திரைப்படம் விரைவில் திரைக்குவர இருக்கிறது. இதற்கிடையில் ஸ்கோடா சூப்பர்ப் என்ற பிரீமியம் தரத்திலான விலைமிக்க செடான் காரை நஸ்லென் டெலிவிரி பெற்றுள்ளார்.

வெள்ளை நிற ஸ்கோடா சூப்பர்ப் காரை அதே வெள்ளை நிற உடையில் ஷோரூமிற்கு வந்து நஸ்லென் டெலிவிரி எடுக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்த படங்களை இவிஎம் ஸ்கோடா என்ற டீலர்ஷிப் ஷோரூம் மையம் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளது. கேரளாவில் பல்வேறு இடங்களில் இவிஎம் ஸ்கோடா டீலர்ஷிப் ஷோரூம்கள் உள்ளன. இதில் எந்த பகுதியில் உள்ள இவிஎம் ஸ்கோடா ஷோரூமில் நஸ்லென் தனது சூப்பர்ப் காரை டெலிவிரி பெற்றுள்ளார் என்பது தெரியவில்லை.
இந்தியாவில் சூப்பர்ப் செடான் காரின் விற்பனையை படிப்படியாக ஸ்கோடா நிறுத்தி வருகிறது. போதிய அளவிற்கு வரவேற்பு இல்லாததினாலும், அறிமுகம் செய்யப்பட்டு நீண்ட வருடங்களாகி விட்டதாலும் இவ்வாறான ஓர் நடவடிக்கையை ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் மேற்கொள்ள வேண்டியதாகிவிட்டது. இவிஎம் ஸ்கோடா டீலர்ஷிப் மையம், தங்களிடம் இருந்த கடைசி சூப்பர்ப் காரை நடிகர் நஸ்லென் டெலிவிரி பெற்றுள்ளதாக தனது இணைய பதிவுகளில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், தங்களது ஷோரூமில் ஸ்கோடா சூப்பர்ப் காருக்கு நிறைவு விழா நடத்துவதுபோல் நஸ்லெனுக்கு கார் டெலிவிரி செய்யப்பட்டுள்ளதாகவும் இவிஎம் ஸ்கோடா தெரிவித்துள்ளது. இந்திய சந்தையில் முதன்முறையாக 2004ஆம் ஆண்டில் ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் சூப்பர்ப் காரை அறிமுகப்படுத்தியது. ஸ்கோடாவின் பிரீமியம் தர செடான் ரக காராக விளங்கும் சூப்பர்ப் மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.34.17 லட்சம் - ரூ.37.27 லட்சம் வரையில் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: நடிகராக இருப்பினும், 23 வயது மட்டுமே ஆன ஓர் இளைஞர் இவ்வளவு விலையில் கார் வாங்குவது பெரிய விஷயமே ஆகும். ரூ.37.27 லட்சம் என்பது ஸ்கோடா சூப்பர்ப் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடு விலை எப்படியிருந்தாலும் ரூ.40 லட்சத்தை தாண்டிவிடும். ஹீரோவாக நடித்த முதல் திரைப்படத்தின் சம்பளத்தில் நடிகர் நஸ்லென் இந்த காரை வாங்கியிருப்பார் என நினைக்கிறோம்.


Click it and Unblock the Notifications









