புதுசா பைக் வாங்கியதும் நடு ரோட்டில் இளைஞர் செய்த செயல்!! போலீஸாரின் ஆக்ஷன் வேற லெவல்!
கேடிஎம் ட்யூக் 390 பைக்கில் நடுரோட்டில் வீலிங் செய்து சீன் காட்டிய இளைஞரை பைக்குடன் போலீஸார் அலேக்காக காவல் நிலையத்துக்கு தூக்கி உள்ளனர். யார் இந்த இளைஞர்? எங்கே இந்த சம்பவம் நடந்துள்ளது? எப்படி இந்த இளைஞர் சிக்கினார்? என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தவறு செய்து இணையம் மூலமாக போலீஸில் சிக்கிக் கொண்டவர்கள் ஏராளம். குறிப்பாக, இளைஞர்கள் விலையுயர்ந்த பைக்குகளில் சாலையில் ஸ்டண்ட் காட்டி, அதனை வீடியோவாக காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிட்டு போலீஸாரிடம் சிக்கிக் கொள்கின்றனர். தவளை தன் வாயால் கெடும் என்பதுபோல் அந்த வரிசையில், போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள இளைஞரை பற்றித்தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

பஞ்சாப் மாநிலம் பாடியாலா நகர போலீஸாரின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதியதாக ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் நடு ரோட்டில் பைக் வீலிங் செய்வதும், பின்னர் அவர் காவல் நிலையத்தில் அமர்ந்திருப்பதும் காட்டப்பட்டுள்ளது. ஒரு நகைச்சுவையான ட்ரோல் வீடியோ போல் இதனை போலீஸார் எடிட் செய்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்.
மற்றப்படி, கைது செய்யப்பட்டுள்ள இளைஞர் குறித்த விபரங்கள் எதையும் வெளியிடவில்லை. இந்த நபர் தான் வாங்கிய புத்தம் புதிய கேடிஎம் ட்யூக் 390 பைக்கை ரோட்டில் அனைவருக்கும் காட்டும் நோக்கத்தில் இந்த செயலை செய்துள்ளார். இந்த நபர் கேடிஎம் பைக்கில் வீலிங் செய்ய, அதனை வேறு வாகனத்தில் இருந்தவர்கள் மொபைல் போனில் காட்சிப்படுத்தி இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

இது இந்த நபரின் நண்பர்களாக தான் இருக்க வேண்டும். இந்த வீடியோவை மற்றவர்களை போல, போலீஸாரும் பார்த்துள்ளனர். பின்னர் என்ன... நடவடிக்கை தான். வீடியோவில் தெரிகின்ற பைக்கின் நம்பர் பிளேட்டை வைத்து பைக்கின் உரிமையாளரை கண்டறிந்து, சம்மந்தப்பட்ட நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
வீடியோவில், முன் வீலிங் மட்டுமின்றி, பின் வீலிங்கையும் இந்த நபர் பொது மக்கள் செல்லும் சாலையில் செய்துள்ளார். ஆதலால், இந்த செயலில் ஈடுப்பட்டுள்ள இந்த நபர் இவ்வாறான பைக் ஸ்டண்ட்களை அடிக்கடி செய்து அனுபவமிக்கவர் போல் தெரிகிறார். ஆனால், இதற்காக இத்தகைய செயல்களை பொது சாலையில் அனுமதிக்க முடியாது. இவ்வாறான ஸ்டண்ட்களை செய்ய ஆசையுள்ளவர்கள் ரேஸ் டிராக்குகளில் செய்து பார்க்கலாம்.

ஆனால், அங்கேயும் முறையாக அனைத்து பாதுகாப்பு ரைடிங் கிட்டை அணிந்த பின்பே செய்ய வேண்டும். பாடியாலா போலீஸ் வெளியிட்டுள்ள வீடியோவில் காட்சித்தரும் நபர் அந்த சமயத்தில் அடிப்படையான ஹெல்மெட் கூட அணிந்திருக்கவில்லை. ஆதலால், இந்த நபர் சாலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். வீடியோவின் இறுதியில், முன்னே செல்லும் ஹூண்டாய் கார் மீது மோதுவது சென்று இந்த நபர் பைக்கை நிறுத்தியுள்ளார்.
ஒருவேளை அந்த நேரத்தில் பைக் ஓட்டி கண்ட்ரோலை இழந்து இருந்தால், அல்லது கார் ஓட்டி திடீரென காரை நிறுத்தி இருந்தால் நடக்கக்கூடாது எல்லாம் நடந்திருக்கும். ஆதலால், இவ்வாறான செயல்கள் ஈடுப்படுவோருக்கு மட்டுமின்றி, சாலையில் செல்லும் மற்றவர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடியவை. இத்தகைய செயலில் ஈடுப்பட்டுள்ள இந்த நபருக்கு போலீஸார் எவ்வளவு தொகையை அபராதமாக விதித்துள்ளனர் என்பது குறித்த விபரங்கள் கிடைக்கவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இணைய மோகம் எந்த அளவிற்கு உள்ளது என்பதற்கு இந்த நிகழ்வே சாட்சி. இந்தியாவில் சாலை விபத்துகள் ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டுவதே தவறு. இதில், இந்த நபர் பைக் வீலிங் செய்துள்ளார் எனும்போது போலீஸார் செய்தது சரியே.


Click it and Unblock the Notifications









