சில வினாடி வீடியோவிற்காக ரூ.70,000ஐ இழந்த இளைஞர்!! இன்ஸ்டாவில் ஃபேமஸ் ஆக இது எல்லாம் தேவைதானா...
இன்ஸ்டாகிராம், யூட்யூப்களில் வீடியோக்கள் மற்றும் பதிவுகளை பதிவிட்டு பலர் பிரபலமாகி உள்ளனர். அதேநேரம், அத்தகைய சமூக வலைத்தள பதிவுகள் பலருக்கு எதிராகவும் திரும்பியுள்ளன. அவற்றில் ஆட்டோமொபைல் மற்றும் போக்குவரத்து தொடர்பான சம்பவங்கள் பலவற்றை இதற்குமுன் நமது செய்திதளத்தில் பார்த்துள்ளோம்.
அந்த வகையில் ஒன்றாக, போக்குவரத்து இடையூறாக காரின் பொனெட்டில் அமர்ந்தப்படி இளைஞர் ஒருவர் பயணம் செய்துள்ளார். இன்ஸ்டாகிராமில் பிரபலமானவராக இருக்கும் இந்த இளைஞர் பொனெட்டில் அமர்ந்தப்படி அந்த நிகழ்வினை தனது மொபைலில் காட்சிப்படுத்தி கொண்டு இருந்துள்ளார். அதேநேரத்தில், இதனை அருகில் சென்ற மற்றொரு வாகனத்தில் இருந்தவர்கள் தங்களது மொபைலில் காட்சிப்படுத்தியுள்ளனர்.
utkarsh_solankii என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவினை தான் மேலே காண்கிறீர்கள். இந்த சம்பவத்தில் அந்த இளைஞர் பளபளப்பான மஞ்சள் நிற மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் இத்தகைய ஸ்டண்ட்டை மேற்கொண்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, போலீஸாரின் பார்வையிலும் பட்டுள்ளது. இதனை கண்டு வெகுண்டு எழுந்த போலீஸார் சம்மந்தப்பட்ட இளைஞருக்கு அதிரடியாக ரூ.70,000-ஐ அபராதமாக விதித்துள்ளனர்.
இவ்வளவு பெரிய தொகை அபராதமாக விதிக்கப்பட்டிருப்பது காரணங்கள், அவர் நெடுஞ்சாலையில் இயங்கி கொண்டிருந்த காரின் பொனெட்டில் அமர்ந்திருப்பது மட்டுமின்றி, போலீஸாரிடம் சிக்காமல் இருக்க காரின் நம்பர் பிளேட்டையும் கழற்றியுள்ளார். இருப்பினும் போலீஸார் வேறு வழிகளில் காரையும், அதன் உரிமையாளரையும் மற்றும் பொனெட்டில் இவ்வாறு ஆபத்தான முறையில் பயணம் செய்தவரையும் அடையாளம் கண்டுள்ளனர்.
போலீஸார் எந்த பிரிவுகளின் கீழ் ரூ.70,000ஐ அபராதமாக விதித்துள்ளனர் என்பது தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால், போலீஸார் இவ்வளவு பெரிய தொகையை அபராதமாக விதித்துள்ளனரா என்பதே உறுதியாக தெரியவில்லை. மேற்குறிப்பிட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோவில், "இது ரூ.70,000 மதிப்புள்ள வீடியோ" என்று குறிப்பிட்டுள்ளனர். இதனை வைத்துதான் சம்மந்தப்பட்ட நபர் ரூ.70,000 அபராதத்திற்கு உள்ளாகியுள்ளார் என நாங்கள் கூறுகின்றோம்.

ஆர்டிஓ நம்பர் பிளேட் அகற்றப்பட்டு இருக்கும் இந்த குறிப்பிட்ட மஞ்சள் நிற மாருதி ஸ்விஃப்ட் காரில் பிரத்யேகமான ஹெட்லேம்ப்கள், முழு பாடி வ்ராப் மற்றும் ஆஃப்டர் மார்க்கெட் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. சமூக வலைத்தளங்களில் பலர் பல நல்ல காரியங்களை செய்துள்ளனர். அதேநேரம் சிலர் இதுபோன்ற செயல்களிலும் ஈடுப்படுகின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை.
இவ்வாறு பொது சாலையில் ஸ்டண்ட்களை மேற்கொள்வது சம்மந்தப்பட்டவரின் உயிருக்கு மட்டுமின்றி, மற்ற வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது. சில நேரங்களில் சம்மந்தப்பட்டவர் எந்த அசம்பாவிதங்களிலும் சிக்காமல் சென்றுவிடுவார், ஆனால் அவர்களது ஸ்டண்ட்களினால் கவரப்படும் மற்ற வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிவிடுவர். அதுபோன்ற நிகழ்வுகளும் சிலமுறை நடந்துள்ளன.
எல்லாவற்றையும் விட காரின் பொனெட்டில் அமர்ந்து பயணம் செய்வது எந்தவொரு நேரத்திலும் ஆபத்தானது ஆகும். இவ்வாறான ஆபத்தான ஸ்டண்ட்களுக்காக போலீஸார் பெரிய தொகையை அபராதமாக விதிப்பது இது ஒன்றும் முதல்முறை அல்ல. பொது சாலைகளில் கார், பைக்குகளை சட்டத்திற்கு புறம்பாக ஓட்டியவர்கள் பலருக்கு அபராதங்களை விதித்து கொண்டுதான் வருகின்றனர். இத்தகைய செயல்களை குறைக்க வேண்டுமென்றால், அபராதங்கள் மட்டுமின்றி சிறைத்தண்டனைகளும் விதிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.


Click it and Unblock the Notifications








