அதிகரித்து வரும் கார் திருட்டு சம்பவங்கள்... தூக்கத்தை தொலைத்த டீலர்கள்!
எவ்வளவோ பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டாலும், திருடர்களிடமிருந்து கார்களை பாதுகாப்பது தற்போது பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது. கார் உரிமையாளர்களுக்கு மட்டுமல்ல, டீலர்களுக்கும் கார்களை பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
ஆம். சென்னை, பெங்களூர், டெல்லி ஆகிய நகரங்களில் நடந்த சமீபத்திய கார் திருட்டு சம்பவங்கள் அதிர்ச்சியை தருவதாக அமைந்துள்ளது. மிக நூதன முறையிலும், டெஸ்ட் டிரைவ் என்ற பெயரிலும் கார்களை வெகு சுலபமாக திருடிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன.

சென்னை சம்பவம்
சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள ஹூண்டாய் கார் டீலரின் யார்டிலிருந்து இரு வாரங்களுக்கு முன் 7 ஹூண்டாய் க்ரெட்டா கார்களை மர்ம கும்பல் ஒன்று அதிரடியாக புகுந்து திருடிச் சென்றது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதிய உத்தி
கடந்த இரு வாரங்களுக்கு முன் அந்த டீலர் யார்டில் மனோகரன் [54] என்பவர் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளார். அதிகாலை 4 மணியளவில் அந்த டீலர் யார்டின் கேட்டின் மீது மர்ம மனிதர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இதையடுத்து, கற்கள் வீசியது யார் என்பதை பார்ப்பதற்கு மனோகரன் கேட்டை திறந்ததுதான் தாமதம், திபுதிபுவென புகுந்த மர்ம கும்பல் ஒன்று, அவரை தாக்கிவிட்டு, அங்கு நின்றிருந்த 9 புத்தம் புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார்களை எடுத்துக் கொண்டு தப்பியது.

சுலப திருட்டு...
டீலர் யார்டில் நிறுத்தப்பட்டிருக்கும் கார்களில் கதவிலேயே சாவி தொங்கவிடப்பட்டிருக்கும். மேலும், ஷோரூமுக்கு எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக எரிபொருளும் நிரப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இதனை பயன்படுத்தி, அந்த கார்களை எளிதாக திருடிச் சென்றுள்ளனர்.

மீட்பு
பாதுகாவலர் மனோகரன் கொடுத்த தகவலின் அடிப்படையில், போலீசார் உஷாராகினர். வாகனச் சோதனையிலும் ஈடுபட்டனர். அப்போது, வளசரவாக்கம் கங்கை அம்மன் கோயில் தெருவில் திருடிச் செல்லப்பட்ட 7ல் 5 கார்களை போலீசாருக்கு பயந்து விட்டு விட்டு சென்றுவிட்டனர். திருடிச் செல்லப்பட்ட 2 க்ரெட்டா கார்களையும் பிடிக்க போலீசார் முயற்சித்து வருகின்றனர்.

நம்பர் பிளேட்
திருடிச் செல்லப்பட்ட ஹூண்டாய் க்ரெட்டா கார்களில் போலீசாருக்கு சந்தேகம் வராத வகையில், போலி நம்பர் பிளேட்டுகளை பொருத்தியிருக்கின்றனர். ஆனாலும், அந்த 5 கார்களையும் மீட்டு டீலரிடம் ஒப்படைத்துள்ளனர் போலீசார்.

ஒரே பாதுகாவலர்
சம்பந்தப்பட்ட அந்த டீலர் யார்டில் மொத்தம் 63 புதிய கார்கள் நிறுத்தப்பட்டிருந்தது. அதன் மதிப்பு கோடிகளை தாண்டும். ஆயினும், ஒரேயொரு பாதுகாவலரை நியமித்துள்ளதும் திருடர்களுக்கு வசதியாக போய்விட்டது.

சந்தேகம்
புதிய கார்கள் லோடு வந்ததை தெரிந்துகொண்டு, டீலரில் பணியாற்றும் யாரோ ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் இந்த திருட்டு சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். எனவே, டீலர் பணியாளர்களிடமும் தீவிர விசாரணை நடக்கிறது.

பெங்களூர் சம்பவம்
சென்னை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பெங்களூரில் கடந்த வாரம் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ காரை மிக திறமையாக திருடிச் சென்றிருக்கிறார் இளைஞர் ஒருவர். பெங்களூரை சேர்ந்த அபிஷேக் என்பவர் தனது ஸ்கார்ப்பியோ எஸ்யூவியை விற்பனை செய்வதற்கு ஆன்லைனில் விளம்பரம் கொடுத்திருக்கிறார்.

அபேஸ்
விளம்பரத்தை பார்த்து தொடர்பு கொண்ட 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் அபிஷேக்கை தொடர்பு கொண்டு காரை வாங்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். மேலும், அபிஷேக் வீட்டிற்கு நேரில் மூன்று முறை வந்திருக்கிறார். மூன்றாவது முறை வந்தபோது, காரை ஓட்டி பார்க்கலாமா என்று கேட்டிருக்கிறார். நம்பிக்கையான ஆளாக தெரிந்ததால், அபிஷேக்கும் காரை கொடுத்திருக்கிறார். ஆனால், காரை ஓட்டிச் சென்ற இளைஞர் திரும்பி வரவே இல்லை.

புகார்
சில மணி நேரம் காத்திருந்து அதிர்ச்சியடைந்த அபிஷேக் போலீசில் புகார் அளித்துள்ளார். வந்த இளைஞர் 20 வயது மதிக்கத்தக்கவராக இருந்ததாகவும், தனது பெயர் சங்கர் என தெரிவித்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். அதிர்ஷ்டவசமாக, முதல்முறை அந்த திருடன் வந்தபோது, அவனை அபிஷேக் மொபைலில் படம் பிடித்திருக்கிறார். அந்த வீடியோவை வைத்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏமாந்த டீலர் பணியாளர்
கடந்த மாதம் குர்கானில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஷோரூமுக்கு அனில் ஆனந்த் மற்றும் ஷகீல் ஆனந்த் என்ற இரண்டு பேர் வந்திருக்கின்றனர். இவர்கள் தந்தை, மகன் என்று தெரிவிக்கப்படுகிறது. அந்த டீலரின் விற்பனை மேலாளரை சந்தித்த இருவரும் மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஒன்றை வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

டெஸ்ட் டிரைவ்
இதையடுத்து, அந்த இருவருக்கும் ரூ.40 லட்சம் மதிப்புடைய காரை டெஸ்ட் டிரைவ் செய்ய கொடுத்துள்ளனர். ஆனால், அந்த காருடன் அந்த அனில் ஆனந்த், ஷகீல் ஆனந்த் இருவருமே தலைமறைவாகிவிட்டனர். இதையடுத்து, டீலரிலிருந்து பணியாளர்கள் படை திரண்டு தேடியும் கார் கிடைக்கவில்லை. இதையடுத்து, போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

சிக்கிய கார்
இந்த நிலையில், ஒரு மாதம் கழித்து அந்த காரை குர்கான் பகுதியில் செல்வது குறித்து டீலருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த காரை டீலர் பணியாளர்கள் மடக்கி பிடித்தனர். அந்த காரில் ஆனந்த் மற்றும ஷகீல் ஆகியோர் இருந்துள்ளனர். மேலும், அந்த கார் போலி நம்பர் பிளேட்டுடன் சென்றிருக்கிறது.

அலட்சியம்?
இதுபோன்ற விலை உயர்ந்த கார்களை டெஸ்ட் டிரைவ் எடுத்துச் செல்லும் வாடிக்கையாளருடன் டீலர் பணியாளர் ஒருவரும் செல்வது வழக்கம். ஆனால், அந்த காரில் டீலர் பணியாளர் இல்லாமல் அனுப்பியது குறித்து இதுவரை எந்த பதிலும் இல்லை.

உஷார்
இந்த சம்பவங்களை பாடமாக எடுத்துக் கொண்டு கார் உரிமையாளர்கள் மற்றும் டீலர்கள் கார்களை பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.


Click it and Unblock the Notifications








