ரெண்டு லைக்குகளுக்காக என்னவெல்லாம் பண்ண வேண்டியிருக்கு பாருங்க... போலீஸ் கொஞ்சமும் பாவம் பார்க்கல!!
சமூக வலைத்தளங்களின் மோகம் நம்மை மறைமுகமாக அடிமைப்படுத்தி வருகிறது என சொன்னால் அது மிகையில்லை. ஏனெனில், இணையத்தில் பிரபலமாகும் முயற்சியாக பலர் பல்வேறு விதமான செயல்களில் ஈடுப்படுவதை தொடர்ந்து பார்த்து வருகிறோம். குறிப்பாக, இளம் தலைமுறையினர்களில் சிலர் லைக்ஸுக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பது ஆச்சிரியத்தை தாண்டி, நம்மை அதிர்ச்சியுற வைக்கிறது. அந்த வகையில், ஸ்பைடர்மேன் உடையில் இளைஞர் ஒருவர் செய்த காரியம் பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. என்ன நடந்தது? வாருங்கள் அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஹாலிவுட் திரைப்பட கதாபாத்திரமான ஸ்பைடர்மேனை பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். சிலந்திப்பூச்சியை போன்று நூலிழையை கொண்டு கட்டிடத்திற்கு கட்டிடம் தாவி சென்று ஆபத்தில் சிக்கும் மக்களை காப்பாற்றுவது போன்றதான கற்பனை திரைப்பட கதாபாத்திரம் ஸ்பைடர்மேன் ஆகும். இந்த சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர், நம் இந்தியாவிலும் கூட.

அந்த வகையில், டெல்லியில் இளைஞர் ஒருவர் ஸ்பைடர்மேன் உடையை அணிந்துக் கொண்டு வாகனங்களில் ஆபத்தான முறையில் பயணம் செய்து வந்துள்ளார். சமூக வலைத்தளங்களில் அதனை அந்த இளைஞர் வீடியோக்களாக பதிவிட, கடைசியில் அந்த வீடியோக்களே அவருக்கு ஆபத்தாக முடிந்துள்ளன. டெல்லியை சேர்ந்த 20 வயது இளைஞர் ஆதித்யா. ஸ்பைடர்மேன் உடையில் வீடியோக்களை இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில், சமீபத்தில் இவர் பதிவிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியது. மஹிந்திரா ஸ்கார்பியோ-என் என்கிற எஸ்யூவி காரின் பொனெட்டின் மீது ஸ்பைடர்மேன் உடையில் ஸ்டைலாக அமர்ந்தப்படி ஆதித்யா சென்றுள்ளார். டெல்லியின் துவார்கா பகுதியில் நடந்துள்ள இந்த சம்பவத்திற்கு இணையத்தில் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். ஏனெனில், காரில் இருந்து ஆதித்யா தவறி விழ நேர்ந்தால், அது அவருக்கு ஆபத்தாக முடிவது மட்டுமின்றி, மற்ற வாகனங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தலாம்.

இதனையடுத்து, ஆதித்யாவின் இந்த வீடியோவிற்கு பலரும் போலீசாரை டேக் செய்ய ஆரம்பித்தனர். டெல்லி துவார்கா நகர போலீசார் இதுகுறித்து விசாரித்து, ஆதித்யாவையும், சம்பவத்தின் போது மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரை ஓட்டிய மற்றொரு இளைஞர் கௌரவ் சிங்கையும் கைது செய்துள்ளனர். மேலும், இந்த செயலில் அவர்கள் பயன்படுத்திய ஸ்கார்பியோ-என் காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது, சீட் பெல்ட் அணியாதது மற்றும் காருக்கு மாசு உமிழ்வு சான்றிதழை வைத்தில்லாதது என கைது செய்யப்பட்டுள்ள ஆதித்யா மற்றும் கௌரவ் சிங்கின் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த குற்றங்களுக்காக அவர்களுக்கு ரூ.26,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் இருவருக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காரின் பொனெட் மீது அமர்ந்து பயணம் செய்வது முட்டாள்தனமான காரியம் ஆகும். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், சில கார்களில் உங்களால் பொனெட் மீது அமரவே முடியாது. ஏனெனில், அந்த அளவிற்கு சாய்வாக பொனெட் வடிவமைக்கப்பட்டிருக்கும். மஹிந்திரா ஸ்கார்பியோ-என் போன்ற அளவில் பெரியதான கார்களின் பொனெட்டில் அமர முடியும் என்றாலும் இது மிகவும் ஆபத்தானது ஆகும்.
ஏனெனில், சாலையில் ஒரு சிறிய பள்ளம் கூட பொனெட்டில் அமர்ந்திருப்பவருக்கு பெரிய ஆபத்தை விளைவிக்கலாம். அதுமட்டுமின்றி, பொனெட்டில் அமர்ந்தப்படி பயணம் செய்வதால், டிரைவரால் முழுமையாக சாலையை பார்க்க முடியாமல் போகலாம். குறிப்பாக, வளைவுகளில் திரும்பும்போது பார்வை முழுவதுமாக மறைக்கப்படும். இது ஆபத்தில் சென்று முடிய வாய்ப்புள்ளது. எல்லாவற்றையும் விட முக்கியமாக, இவ்வாறான செயல்களினால் விபத்து நடக்கும் பட்சத்தில், அது சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்தாக முடியலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இணையத்தில் லைக்குகளுக்காக இவ்வாறு நடந்துக் கொள்வது மிகுந்த வேதனை அளிக்கக்கூடியதாக உள்ளது. இதில் மேலும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இவ்வாறான செயல்களில் ஈடுப்படுவோரில் பெரும்பாலானோருக்கு இது தவறு என்பதே தெரியாததுதான். சமூக வலைத்தளங்களில் பிரபலமாகுவதை காட்டிலும் உயிர் முக்கியமானது ஆகும்.


Click it and Unblock the Notifications








