போலீஸ் ஸ்டேஷன் பாத்ரூமில் வழுக்கி விழ ரெடியாகும் அடுத்த கோஸ்டி!! வீடியோ பயங்கர ஸ்பீடா வைரல் ஆகிட்டு இருக்கு!
டொயோட்டா இன்னோவா (Toyota Innova) காரில் வெளியே தொங்கியப்படி சென்ற இளைஞர்கள் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, போலீஸார் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம், வாங்க.
சமூக வலைத்தளங்களில் லைக்ஸையும், கமெண்ட்ஸையும் வாங்க வேண்டும் என்பது இன்றைய காலத்தில் மனவியாதி அளவுக்கு ஆபத்தானதாக மாறிவருகிறது. ஏனெனில், இதற்காக சிலர் வித்தியாச, வித்தியாசமான செயல்களில் ஈடுப்படுகின்றனர். ஒரு சிலரோ, இணையத்தில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக மிகவும் ஆபத்தான செயல்களில் ஈடுப்படுவதை பார்க்க முடிகிறது.

அந்த வரிசையில் டொயோட்டா இன்னோவா காரில் வெளியே தொங்கியப்படி, காரின் ஜன்னல்கள் மீது அமர்ந்து பயணம் செய்த இளைஞர்களை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். கேரளாவில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் தொடர்பான வீடியோ யுடியூப்பில் அதிக பார்வையாளர்களை பெற்றுள்ளது. ஆனால், அதேநேரம் போலீஸாரின் பார்வையிலும் இந்த வீடியோ பட்டதை அடுத்து, இந்த இளைஞர்கள் மீது அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளது.
கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் நடந்துள்ள இந்த சம்பவத்தில் 4 இளைஞர்கள் இன்னோவா காரின் கதவுகளின் ஜன்னல்கள் மீது அமர்ந்துக் கொண்டு, வெளியே தொங்கியப்படி அபாயகரமாக பயணம் செய்துள்ளனர். குறிப்பாக, ஒரு இளைஞர் டிரைவர் இருக்கைக்கு அருகே இருக்கும் ஜன்னல் வழியாக மொத்தமாக காருக்கு வெளியே வந்து, காரின் ரூஃப்-ஐ பிடித்தப்படி சென்றிருப்பதை வீடியோவில் காணலாம்.
அதாவது, டிரைவருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இந்த இளைஞர் செயல்பட்டுள்ளார். அப்படியிருந்தும் டிரைவர் எவ்வாறு காரை ஓட்டினார் என்பது தெரியவில்லை. இந்த காட்சிகள் யாவும் இந்த இன்னோவா காருக்கு பின்னால் வந்த காரில் இருந்தவர்கள் காட்சிப்படுத்தி இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோவை காட்சிப்படுத்தியவர் இந்த இளைஞர்களுக்கு தெரிந்தவரா? அவர்கள் சொல்லியே இந்த வீடியோ காட்சிப்படுத்தப்பட்டு உள்ளதா? என்பது உறுதியாக தெரியவில்லை.
ஆலப்புழா மாவட்டத்தில் காயாம்குளம் - பூனலூர் சாலையில் இந்த இன்னோவா கார் சென்று கொண்டிருந்த போது இந்த வீடியோ காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. சம்பவத்தின்போது, கார் ஓரளவிற்கு அதிகமான வேகத்தில் சென்றிருப்பதை வீடியோவில் காண முடிகிறது. குறைவான வேகத்தில் சென்றிருந்தாலும், இவ்வாறான செயல்கள் ஆபத்தானவையே ஆகும்.

குறிப்பாக, காரை ஓட்டும் டிரைவருக்கு இடையூறு அளிக்கும் வகையில் ஜன்னல் வழியாக காருக்கு வெளியே வருவது மிகவும் அபாயகரமானது என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், எந்தவொரு வாகனத்திலும் டிரைவர் என்பவர் எந்தவொரு இடையூறும் இன்றி சுதந்திரமாக செயல்பட வேண்டியது அவசியமாகும். டிரைவர் இருக்கைக்கு அருகே இருக்கும் ஜன்னல் வழியாக வெளியேறும்போது சில வினாடிகளுக்கு டிரைவருக்கு சாலையின் பார்வை மறைக்கும்.
இது பெரிய விபத்தில் சென்று முடிவதற்கும் வாய்ப்புள்ளது. அல்லது, காரை ஓட்டிக் கொண்டிருந்த டிரைவர் தான் இவ்வாறு ஜன்னல் வழியாக வெளியே வந்துள்ளார் என்றால், அது இன்னும் ஆபத்தானது ஆகும். இதுகுறித்து விசாரித்த ஆலப்புழா ஆர்டிஓ, கார் உரிமையாளரின் வீட்டிற்கு நேரடியாக சென்று இந்த இன்னோவா காரை பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன், சம்பவத்தின்போது காரை ஓட்டியவரின் டிரைவிங் லைசன்ஸையும் கேன்சல் செய்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறான செயல்கள் எந்த அளவிற்கு ஆபத்தானது என்றால், இந்த 4 இளைஞர்களும் தற்கொலைக்கு முயன்றுள்ளனர் என்றுதான் சொல்ல வேண்டும். அதுமட்டுமின்றி, சம்பவத்தின்போது இவர்களது இன்னோவா கார் வளைவுகளில் அதிவேகமாக திரும்புவதை வீடியோவில் காணலாம். சாலையில் இவ்வாறு நடந்துக் கொள்வது மிகவும் ஆபத்தானது என்று இன்றைய கால இளம் தலைமுறையினர் உணராத வரை இத்தகைய செயல்களை தடுக்க முடியாது.


Click it and Unblock the Notifications








