5 நிமிஷ சந்தோஷத்துக்காக... தவளை தன் வாயால் சிக்கிடுச்சு!! ஆடி காரில் செய்யும் வேலையா இது?
தலைநகர் டெல்லிக்கு அருகே, காரின் மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்த இளைஞர்களுக்கு அதிரடியாக ரூ.31,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எதற்காக இவ்வாறான ஒரு செயலில் ஈடுப்பட்டனர்? என்பதையும், இந்த சம்பவம் தொடர்பான கூடுதல் விபரங்களையும் இனி இந்த செய்தியில் பார்க்கலாம், வாங்க.
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் லைக் & கமெண்ட்களை பெற விசித்திரமான செயல்களில் ஈடுப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, போலீஸாருக்கும் வேலை பளு அதிகரிக்கிறது. இதற்கு உதாரணமாக, பல்வேறு சம்பவங்களை பற்றி இதற்குமுன் நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம்.

குறிப்பாக, கார் & பைக்குகளில் வீலிங், டிரிஃப்ட் உள்ளிட்ட சாகச செயல்களில் ஈடுப்பட்டு அதனை இணையத்தில் பதிவிட்டு லைக்குகளை பெற இளம் தலைமுறையினர் நிறைய பேர் முயற்சிக்கின்றனர். ஆனால், அது பெரும்பாலான நேரங்களில் ரிவிட் ஆகிவிடுகிறது. அதாவது, நெட்டிசன்களின் கவனத்தை ஈர்க்க இணையத்தில் வெளியிடப்பட்ட வீடியோவினால் போலீஸாரிடம் சிக்கிக் கொண்ட இளைஞர்கள் ஏராளம்.
அந்த வரிசையில், தலைநகர் டெல்லிக்கு அருகே உத்திர பிரதேச மாநிலம், நொய்டாவில் இளைஞர்கள் சிலர் சொகுசு கார்களில் சன்ரூஃப் வழியாக எட்டி பார்த்தப்படி பயணம் செய்துள்ளனர். இதில் குறிப்பாக ஆடி காரில் பயணம் செய்த இளைஞர் ஒருபடி மேலே சென்று, காரின் மேற்கூரையில் அமர்ந்தப்படி பயணம் செய்துள்ளார்.

இதனை அவர்கள் தங்களது மொபைல் போனில் காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிட, அது வைரலாகியது. ஆனால் இதில் பிரச்சனை என்னவென்றால், மற்றவர்களுடன் சேர்ந்து இந்த வீடியோவை போலீஸாரும் பார்த்துள்ளனர். இதனையடுத்து, இந்த செயலில் ஈடுப்பட்ட இளைஞர்கள் மீது நொய்டா போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன்படி, சம்பந்தப்பட்ட இளைஞர்களுக்கு போலீஸார் அதிரடியாக ரூ.31,000 அபராதம் விதித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக டிரைசிட்டி டூடே என்கிற டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், ஹைவேயில் அதிவேகமாக சென்று கொண்டிருக்கும் கார்களில் இருந்து சன்ரூஃப் வழியாக இளைஞர்கள் வெளியே எட்டிப் பார்த்தப்படி பயணம் செய்வதையும், அதில் ஆடி ஏ4 செடான் காரில் இளைஞர் ஒருவர் கொஞ்சம் அதிகமாக வெளியே வந்து காற்றில் கைகளை நீட்டியப்படி பயணம் செய்வதையும் காணலாம்.

இணையத்தில் பார்வையாளர்களை கவர்வதற்காக இவ்வாறான செயலில் ஈடுப்பட்டு, அதனை வீடியோவாக காட்சிப்படுத்திருப்பது தெளிவாக தெரிகிறது. ஏனெனில், ஆடி ஏ4 காரின் சன்ரூஃப்-இல் அமர்ந்து பயணம் செய்த இளைஞர் 2, 3 முறை கேமராவை பார்க்கிறார். மேலும், இந்த வீடியோவை கேமராவில் காட்சிப்படுத்தியவரும் ஏதோ ஒரு காரின் மேற்கூரையில் அமர்ந்து கொண்டே காட்சிப்படுத்தி உள்ளார்.
இந்த வீடியோவில், 2 ஆடி கார்களை காண முடிகிறது. ஒன்றின் நம்பர் பிளேட் மறைக்கப்பட்டுள்ளது; ஆனால் மற்றொன்றின் நம்பர் பிளேட் மறைக்கப்படவில்லை. நம்பர் பிளேட் மறைக்கப்படாத ஆடி காரின் உரிமையாளருக்கு போலீஸார் தங்களது ரூ.31,000 அபராத செல்லானை அனுப்பி வைத்துள்ளனர். மொத்தம் 7 பிரிவுகளின் கீழ் இந்த ஆடி கார் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: காரின் சன்ரூஃப் வழியாக எட்டிப்பார்த்தப்படி பயணம் செய்வது இந்தியாவில் தண்டனைக்குரிய குற்றமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், காரில் இவ்வாறு பயணம் செய்வது மற்ற வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்க கூடும். காரில் சன்ரூஃப் வழங்கப்படுவது, கார் நின்றிருக்கும் போது பயன்படுத்துவதற்கு மட்டுமே ஆகும்.


Click it and Unblock the Notifications









