ரூ.40 லட்சத்தில் சூப்பர் பைக்கை வாங்கியது, ஆம்லேட் போடுவதற்கா...? லைக்ஸ்-காக என்னென்ன செய்றாங்க பாருங்க!!
லைக்குகளையும், கமெண்ட்களையும் இணையத்தில் பெற மக்கள் பல்வேறு விதமான, விசித்திரமான செயல்களில் கூட ஈடுப்படுகின்றனர். அவ்வாறாக, இங்கு ஒருவர் தனது விலையுயர்ந்த பைக்கில் முட்டையை உடைத்து ஆம்லேட் போட்டுள்ளார். யார் அவர்? எதற்காக இவ்வாறு செய்தார்? இறுதியில் என்ன ஆனது? என்பது குறித்த விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.
மொபைல் போன் இருந்தால் போதும் யார் வேண்டுமாயின் யுடியூபர் ஆகலாம் என்ற நிலை உள்ளதால், பார்வையாளர்களை பெறுவதில் இணையத்தில் பலத்த போட்டி நிலவி வருகிறது. இதனாலேயே சில பல விசித்திரமான செயல்களில் ஈடுப்பட்டு பார்வையாளர்களின் கவனத்தை பெற சிலர் முயற்சிக்கின்றனர். அந்த வகையில் தான் இங்கு ஒருவர் தனது பைக்கில் ஆம்லேட்டை போட்டுள்ளார்.

பைக்கின் என்ஜின் வெப்பத்தில் யார் வேண்டுமாயின் தங்களது பைக்கில் ஆம்லேட்டை போடலாமே என நீங்கள் கேட்பது புரிகிறது. இங்கு தான் இந்த நபர் தன்னிடம் உள்ள சிறப்பானதை வெளிக்காட்டி உள்ளார். அதாவது இந்த நபர் ஆம்லேட் போட்டு இருப்பது அவரது விலையுயர்ந்த டுகாட்டி சூப்பர் பைக்கில் ஆகும். சாதாரண பைக்கில் ஆம்லேட் போட்டு இருந்தால் மக்கள் சாதாரணமாக கடந்து சென்று இருப்பர்.
ஆனால் விலையுயர்ந்த, கவர்ச்சிக்கரமான பைக்கை பார்ப்பதற்காகவும், அதில் ஆம்லேட் எப்படி வந்துள்ளது என்பதை அறிவதற்காகவும் இதுகுறித்த வீடியோவை அதிக பார்வையாளர்கள் கண்டுகளித்துள்ளனர். இந்த வீடியோ ஜே.எஸ் பிலிம்ஸ் என்ற யுடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த யுடியூப் சேனலில் இவ்வாறான சூப்பர் பைக்குகள் தான் பெரும்பாலும் காட்டப்படுவதால், இந்த சேனலுக்கு தற்போது வரையில் மட்டுமே சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர்.
இந்த செய்தியில் நாம் பார்க்கும் வீடியோவில் காட்சி தந்திருப்பது சிவப்பு நிற டுகாட்டி பனிகளே வி4 எஸ் பைக் ஆகும். ரூ.40 லட்சத்தில் ஆன்-ரோடு விலையை கொண்ட இந்த பைக்கை கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் தான் வீடியோவில் காட்சி தரும் நபர் டெலிவிரி எடுத்ததாக கூறப்படுகிறது. மேலே பதிவிடப்பட்டுள்ள வீடியோவின் ஆரம்பத்தில், ஒரு சிறுவன் சைக்கிளில் வந்து, இந்த நபரிடம் என்ன செய்கிறீர்கள் என கேட்கிறான்.
இதற்கு உடனே இந்த நபர் ஆம்லேட் செய்ய போகிறேன், உனக்கு வேண்டுமா என நக்கலாக அவனிடம் கேட்கிறார். அதன்பின் ஆம்லேட்டை செய்வதற்கு தயாராகும் இந்த நபர், பார்வையாளர்களிடம் "நீங்கள் எல்லா விதமான ஆம்லேட்டையும் சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் இவ்வாறு ஆம்லேட் செய்வதை பார்த்திருக்கவே மாட்டீர்கள்" என கூறுகிறார். அதனை தொடர்ந்து பைக்கிற்கு அருகில் வந்து, இந்த ரூ.40 லட்சம் மதிப்புள்ள பைக்கில் தான் நாம் ஆம்லேட் போட போகிறோம் என்கிறார்.

இதற்காக ஒரு பேப்பர் கிண்ணத்தில் முட்டையை உடைத்து, அதன்பின் அதனை ஒரு அலுமினிய தாளில் ஊற்றுகிறார். பின்னர், பைக்கின் என்ஜினை ஸ்டார்ட் செய்து, பெட்ரோல் டேங்கிற்கு கீழே ரேடியேட்டரில் இருந்து சூடான காற்று வெளிவரும் பகுதியில் அந்த அலுமினிய தாளை வைக்கிறார். இதற்காக பைக் சற்று சாய்த்து கொள்ளப்படுகிறது. இந்த நிலையிலேயே, சிறிது நேரம் பைக்கின் ஆக்ஸலேரேட்டரை முறுக்க, ஒரு கட்டத்திற்கு மேல் முட்டை முழுவதுமாக ஆம்லேட் ஆகிவிட்டது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து
இந்த செயல் முழுக்க முழுக்க யூடியூப்பில் பார்வையாளர்களை பெறவும், அதன் மூலம் லைக்குகளை பெறவும் மட்டுமே. மற்றப்படி, டுகாட்டி பைக்கின் தரத்தை தரக்குறைவாக காட்ட வேண்டும் என்பது இவர்களது நோக்கம் அல்ல, எங்களது நோக்கமும் அல்ல. எந்தவொரு எரிபொருள் பைக்கின் என்ஜினும் வெப்பத்தை உமிழக்கூடியது. ஆதலால் எந்தவொரு பைக்கின் என்ஜின் மீதும் முட்டையை உடைத்து ஊற்றினால் ஆம்லேட் கிடைக்கும். இவர்கள் அதனை விலையுயர்ந்த பைக்கில் செய்துள்ளனர், அவ்வளவுதான்.


Click it and Unblock the Notifications