இப்போ தானே கல்யாணம் முடிஞ்சது, அதுக்குள்ள இப்படி நடந்திடுச்சே!! யூடியூபர் இர்பான் கார் மோதி பெண் பலி...
பிரபல யூடியூபர் (Youtuber) முகமது இர்பானின் சொகுசு கார் மோதிய விபத்தில் 55 வயதான பெண்மணி ஒருவர் இறந்துள்ள துயர சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னைக்கு அருகே நடந்துள்ள இந்த விபத்தை பற்றிய முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.
மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தாலே சந்திக்கும் பிரச்சனைகளும் அந்த அளவிற்கு வேகமாக மக்களிடத்தில் பிரபலமாகிவிடும். அதிலிலும், நெட்டிசன்களின் கேலி, கிண்டல்களுக்கு ஆளாகும் நபருக்கு ஒன்று என்றால், அது சமூக வலைத்தளங்களில் மீம்ஸாக வெளிவர ஆரம்பித்துவிடும். அத்தகைய மனிதர்களுள் ஒருவர் தான் யூடியூபர் முகமது இர்பான் ஆவார்.

"பறக்குறோம்... பறந்தே ஆகுறோம்" இந்த டைலாக்கை எங்கேயோ கேட்டது மாதிரி உள்ளதா? யூடியூப்பில் வெவ்வேறு உணவகங்களுக்கு சென்று உணவுகளை ருசித்து பார்த்து வீடியோ பதிவிடும் முகமது இர்பானின் பிரபலமான வசனம் இது. சமீபத்தில் இவருக்கு திருமணம் முடிந்தது. அதுக்கூட இணையத்தில் மீம்ஸ்களாக தெறித்தது. இந்த நிலையில் இர்பானின் சொகுசு கார் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகருக்கு அருகே பொத்தேரி என்ற பகுதியில் நடந்துள்ள இந்த சம்பவத்தின்போது காரை இர்பானின் கார் டிரைவர் அசாரூதின் என்பவர் இயக்கி வந்ததாக கூறப்படுகிறது. இந்த கார் விபத்தில் உயிரிழந்துள்ள நபரின் பெயர் பத்மாவதி, வயது 55. பொத்தேரியில் வசித்துவந்த இவர் அங்குள்ள ஓர் தனியார் கல்லூரியில் பணியாற்றி வந்துள்ளார்.

நேற்று (மே 26) வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு மறைமலை நகரில் உள்ள தன்னுடைய மகள் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. மறைமலைநகர் ஜிஎஸ்டி சாலையை பத்மாவதி கடக்க முற்பட்டபோது, வேகமாக வந்த இர்பானின் ஆடம்பர சொகுசு கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பொத்தேரி போலீஸார் டிரைவர் அசாரூதினை கைது செய்துள்ளனர்.
சம்பவத்தின்போது இர்பானும் காருக்குள் இருந்ததாக பொது மக்கள் சிலர் தெரிவித்துள்ளனர். விபத்தில் பத்மாவதியின் மீது மோதியது இர்பானின் விலையுயர்ந்த மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.எஸ் எஸ்யூவி கார் ஆகும். மோதிய வேகத்தில் காரின் முகப்பு பகுதி பலத்த சேதமடைந்துள்ளது. குறிப்பாக, காரின் பொனெட் அப்பளம் போல் மடங்கிப்போய் உள்ளது. அதேபோல், காரின் முன்பக்கத்தில் க்ரில் மற்றும் பம்பர் பகுதிகளிலும் சேதாரங்கள் ஏற்பட்டுள்ளன.

Image Courtesy: Newindianexpress
க்ரில்லின் மத்தியில் பொருத்தப்படும் மெர்சிடிஸின் லோகோ அடையாளமே தெரியாத அளவிற்கு சேதமடைந்துள்ளது. நமக்கு கிடைத்துள்ள படத்தில் காரில் நம்பர் பிளேட் இல்லை. விபத்தின்போது நம்பர் பிளேட் கழன்று விழுந்ததா அல்லது காரின் உரிமையாளர் குறித்த விபரங்கள் கசியாமல் இருக்க நம்பர் பிளேட் கழற்றப்பட்டு உள்ளதா என்பது தெரியவில்லை. தற்சமயம் இந்தியாவில் விற்பனையில் இருக்கும் மாடர்ன் மெர்சிடிஸ் ஜி.எல்.எஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.21 கோடி - ரூ.1.29 கோடி வரையில் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: அவ்வளவு பெரிய சொகுசு பென்ஸ் காருக்கே இந்த அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது என்றால், பலியான பத்மாவதி எந்த அளவிற்கு படுகாயம் அடைந்திருப்பார் என்பதை உணர முடிகிறது. சம்பவத்தின்போது இர்பானும் காருக்குள் இருந்ததாக சம்பவ இடத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளதால், இதுகுறித்தும் போலீஸார் தீவிரமாக விசாரிக்க வேண்டியது அவர்களது கடமை ஆகும்.


Click it and Unblock the Notifications









