பாதுகாப்புக்கு பெயர்போன... மஹிந்திரா ஸ்கார்பியோ காரில் கூடவா இப்படி நடக்கும்!! இதை எதிர்பார்க்கவே இல்ல
பரபரப்பான தினசரி நகர்புற வாழ்க்கையில் இருந்து சற்று ஓய்வெடுத்து கொள்ள, காடுகளும், அருவிகளும் நிறைந்த பகுதிகளுக்கு ஓர் சிறிய அட்வென்ச்சர் பயணங்களை ஆவது அவ்வப்போது மேற்கொண்டுவிடுவது கட்டாயம் என்றுகூட சொல்லாம். ஆனால் அதேநேரம் அட்வென்ச்சர் பயணங்களிலும் சில பல ஆபத்துகளும் அசவுகரியங்களும் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனால் நாம் சற்று கவனமாக செயல்பட்டால், அவற்றை தவிர்த்துவிடலாம். குறிப்பாக, அட்வென்ச்சர் பயணங்களின்போது நாம் ஓவராக உணர்ச்சிவசப்பட்டு சில விசித்திரமான செயல்களில் ஈடுப்படக்கூடும். அட்வென்ச்சர் பயணங்களின் ஹைலைட்டே அத்தகைய விசித்திரமான செயல்கள் தான் என்றாலும், அவற்றை செய்வதற்குமுன் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து கொள்வது நல்லது.

இல்லையெனில், இந்த மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார் உரிமையாளருக்கு நடந்தது போன்றுதான் நடக்கும். ஓர் சிறிய நீர் வீழ்ச்சியை கண்ட இந்த ஸ்கார்பியோ என் கார் உரிமையாளர் நீர் விழும் பகுதியில் சரியாக தனது நிறுத்தியுள்ளார். நம்மில் பலர் நீர் வீழ்ச்சியில் குறைந்தது ஒரு முறையாவது குளித்து இருப்பீர்கள் என நினைக்கிறேன். உயரத்தில் இருந்து கொட்டுவதால் நீர் வீழ்ச்சிகளின் வேகமும், விசையும் பொதுவாகவே சற்று அதிகமாகவே இருக்கும்.
இருப்பினும் அத்தகைய விசையை தனது மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரின் மேற்கூரை தாங்கும் என நினைத்த இந்த நபர் தைரியமாக நீர் வீழ்ச்சிக்கு கீழே காரை நிறுத்தியுள்ளார். ஆனால் அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக, காரின் மேற்கூரையில் இருந்து நீர் சொட்ட ஆரம்பித்து, ஒரு கட்டத்திற்குமேல் காருக்கு உள்ளேயும் ஓர் புதியதொரு நீர் வீழ்ச்சி ஆரம்பித்துவிட்டது. இதனை அந்த நபர் வீடியோவாக காட்சிப்படுத்தி தனது யுடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவை தான் மேலே காண்கிறீர்கள். நீர் கசிவால் காரின் உட்பக்க கேபின் சில வினாடிகளிலேயே அலங்கோலமாகியுள்ளது. குறிப்பாக, முன் இருக்கைகளும், மைய கன்சோல் பகுதியும் முற்றிலுமாக நீரால் நனைந்தன. காரின் மேற்கூரை கேபின் விளக்கு மற்றும் ஸ்பீக்கர்கள் மூலமாக நீர் உள்ளே நுழைந்துள்ளது. இதனால் மேற்கூறிய இரு பாகங்களும் பார்ப்பதற்கே பரிதாபமான நிலைக்கு சென்றுவிட்டன.
வழியில் நீர் வீழ்ச்சியை கண்ட இந்த ஸ்கார்பியோ என் கார் உரிமையாளர் அதனை கடந்த பின்பு, அதன் கீழ் காரை நிறுத்தினால் எப்படியிருக்கும் என யோசித்து, ரிவர்ஸில் வந்து நிறுத்தியுள்ளார். நீர் கசிந்தாலும் சில நிமிடங்களுக்கு பிறகே சொட்டு சொட்டாக கசியக்கூடும், அந்த நேரத்தில் காரை அங்கிருந்து எடுத்துவிடலாம் என இவர் நினைத்திருக்கக்கூடும். ஆனால் நீர் வீழ்ச்சியின் கீழ் காரை நிறுத்திய அடுத்த சில வினாடிகளிலேயே காரினுள் நீர் கசிய ஆரம்பித்துவிட்டது.

கேபினுக்குள் கசிந்த நீர் மைய கன்சோலில் இருந்த குழிகளை எல்லாம் நிரப்பிவிட்டது. குறிப்பாக, கியர் நெம்புகோலை சுற்றிலும் வழங்கப்படும் குழிகளும் நிரம்பிவிட்டன. இருப்பினும், இதன் காரணமாக கார் ஸ்டார்ட் ஆகுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. அதேபோல், கியர் போடுவதையும், கார் முன்னோக்கி செல்வதையும் நீர் தடுக்கவில்லை. இருப்பினும் நீர்வீழ்சிக்கு கீழ் காரை நிறுத்துவது எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
நீர் கசியும் அளவிற்கு காரை உருவாக்கியுள்ளதா மஹிந்திரா நிறுவனம் என இந்த நேரத்தில் ஒரு கேள்வி எழலாம். மஹிந்திரா மட்டுமின்றி, எந்தவொரு கார் தயாரிப்பு நிறுவனமும் மழைநீர் உள்ளே நுழையாத அளவிற்கே காரின் மேற்கூரையை வடிவமைக்கும். அதாவது, மழைநீரின் விசையை தாங்குவதற்கு போதுமான பலத்துடனே காரின் மேற்கூரைகள் வடிவகைக்கப்படும். அதுவே நீர்வீழ்ச்சியின் விசையை தாங்குவதற்கு கூடுதல் வலுவாக எடை மிக்க பாகங்களை கொண்டு மேற்கூரையை வடிவமைக்க வேண்டியிருக்கும். இதன் விளைவாக, காரின் எடை அதிகரிக்க எந்த தயாரிப்பு நிறுவனமும் விரும்புவதில்லை.


Click it and Unblock the Notifications