மனைவி உடன் சர்வ சாதாரணமாக பைக்கில் போனவரு இவ்வளவு பெரிய ஆளா!! பைக்கின் விலை மட்டும் பல இலட்சம்...
சொமாட்டோ (Zomato), இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவிரி நிறுவனம். இந்த நிறுவனத்தின் சிஇஓ ஆக இருக்கும் தீபிந்தர் கோயல் ஓர் சொகுசு கார் பிரியர் ஆவார். புதியது, புதியதாக விலையுயர்ந்த கார்களை தீபிந்தர் கோயல் வாங்கியுள்ளதை பலமுறை பார்த்துள்ளோம். சமீபத்தில் கூட, பச்சை நிறத்தில் அஸ்டன் மார்டின் கார் ஒன்றை வாங்கி இருந்தார். இவ்வாறு ஒருபக்கம் விலையுயர்ந்த வாகனங்களை வாங்கிக் குவித்தாலும், மறுப்பக்கம் அதற்கு காரணமான தொழிலையும் கவனிக்க தீபிந்தர் கோயல் மறந்தது இல்லை. அந்த வகையில், தனது மனைவி உடன் இணைந்து ஓர் அசத்தலான காரியத்தை இவர் செய்துள்ளர். அது என்ன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்கவுள்ளோம்.
தொழிலதிபர்கள் என்றாலே விலையுயர்ந்த வாகனங்களை வாங்கி குவிப்பவர்களாக இருப்பர். அதில், சொமாட்டோ சிஇஓ தீபிந்தர் கோயலும் விதிவிலக்கு அல்ல. 2010ஆம் ஆண்டில் சொமாட்டோவை ஆரம்பித்த தீபிந்தர் கோயல் இன்று இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களுள் ஒருவராக இருக்கிறார். இதற்கேற்ப சொமாட்டோவின் உணவு டெலிவிரிகள் கிட்டத்தட்ட இந்தியாவின் 1000க்கும் அதிகமான நகரங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

டெல்லி ஐஐடி-இல் படித்தவரான தீபிந்தர் கோயல், சொமாட்டோ இந்த அளவிற்கு வளர்ந்திருப்பதற்கு முக்கியமான காரணமானவர் என சொன்னால் அது மிகையில்லை. எந்த அளவிற்கு என்றால், நிறுவனத்தின் சிஇஓ-வான தீபிந்தர் கோயல், நொய்டாவில் சமீபத்தில் சொமாட்டோவில் உணவு ஆர்டர் செய்தவர்களுக்கு தன் கையால் உணவை டெலிவிரி செய்துள்ளார். மேலும், இந்த உணவு டெலிவிரிகளின் போது தனது மனைவி கிரேசியா முனோஸையும் உடன் அழைத்து சென்றுள்ளார்.
சொமாட்டோ டெலிவிரி பாய் யூனிஃபார்மில் இந்த கணவன் மனைவி இருக்கும் வீடியோ இன்ஸ்டாகிராமில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், உணவை டெலிவிரி செய்ய இந்த தம்பதி பயன்படுத்தியது டிரையம்ப் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் என்கிற பிரீமியம் தரத்திலான பைக் ஆகும். சொமாட்டோ டெலிவிரி பார்ட்னர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை நேரடியாக புரிந்துக் கொள்வதற்காகவே இந்த செயலில் ஈடுப்பட்டுள்ளதாக தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.

இதன் மூலமாக அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளையும் வருங்காலங்களில் செய்துக் கொடுக்க முடியும் என நம்பும் தீபிந்தர் கோயல் இந்த டெலிவிரி பயணத்தில் அவர் மட்டுமின்றி, மனைவியையும் ஹெல்மெட் அணிய வைத்து, முறையாக சாலை விதிமுறைகளை பின்பற்ற வைத்து தீபந்தர் கோயல் அழைத்து சென்றுள்ளார். இதனை இணையவாசிகள் பலரும் பாராட்டியுள்ளனர்.
இந்த பயணத்தில் தீபிந்தர் கோயல் பயன்படுத்தி இருப்பது பிரிட்டிஷ் ஸ்டைல் டிரையம்ப் பைக்கான ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் ஆகும். இந்தியாவில் விலை குறைவான டிரையம்ப் பைக்கான ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ், கடந்த 2023 ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த டிரையம்ப் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.2.64 லட்சமாக உள்ளது. இந்த பைக்கில் 399சிசி, சிங்கிள்-சிலிண்டர் லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது.

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 39.5 பிஎச்பி மற்றும் 37.5 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. சாதாரணமான சாலை மற்றும் ஆஃப்-ரோடு சாலை என இரண்டிற்கும் கொண்டு செல்லக்கூடிய பைக்காக ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் விளங்குகிறது. இதற்கேற்ப நன்கு உயரமான சஸ்பென்ஷன் மற்றும் 195மிமீ-இல் கிரவுண்ட் கிளியரென்ஸை இந்த டிரையம்ப் பைக் கொண்டுள்ளது.
சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் 43மிமீ தலைக்கீழான பிக் பிஸ்டன் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் ரிமோட் ரிசார்வர் உடன் வாயு மூலமாக செயல்படும் மோனோஷாக்கும் வழங்கப்படுகின்றன. மேட் காக்கி க்ரீன்/ ஃப்யுஸன் வெள்ளை, கார்னிவல் சிவப்பு/ பாண்டோம் கருப்பு மற்றும் பாண்டோம் கருப்பு/ சில்வர் ஐஸ் என 3 விதமான கலர் ஆப்ஷன்களில் இந்த பைக் கிடைக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்விகி, சொமாட்டோ போன்ற உணவு டெலிவிரி நிறுவனங்களின் டெலிவிரி பாய் ஆடைகளை சமீப காலமாக நிறைய பேர் சமூக வலைத்தளங்களில் கவனத்தை பெற பயன்படுத்துகின்றனர். அந்த வகையில்தான், தீபிந்தர் கோயலும் இந்த உடையை அணிந்துள்ளார் என்றாலும், இதில் இருந்து அவரது தொழில் பக்தியையும் பார்க்க முடிகிறது.


Click it and Unblock the Notifications









