பெரிய படிப்பு படிச்சுட்டு குழந்தையுடன் ஜொமோட்டோ வேலைக்கு வந்தது ஏன்? பெண் சொன்ன காரணத்தால் கலங்கி போன மக்கள்!
இந்தியாவில் ஸ்விக்கி (Swiggy) மற்றும் ஜொமோட்டோ (Zomato) ஆகியவை மூலம் உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்த்து கொண்டே வருகிறது. அதிக கட்டணம் வசூல் செய்வது தொடர்பாக ஸ்விக்கி மற்றும் ஜொமோட்டோ ஆகிய நிறுவனங்கள் மீது சமூக வலை தளங்களில் பலர் மிக கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். இருப்பினும் இந்த 2 நிறுவனங்களும், பல ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளன என்பதை யாராலும் மறுக்க முடியாது.
பெரிய நிறுவனங்களில் கை நிறைய சம்பாதித்த சாஃப்ட்வேர் இன்ஜினியர் உள்ளிட்டோர் கூட, சில சமயங்களில் உணவு டெலிவரி ஏஜெண்ட் ஆக வேலை செய்ததை நாம் பார்த்துள்ளோம். லேஆஃப் (Layoff) என்ற பெயரில், வேலை பறிக்கப்படும் சமயங்களில், ஸ்விக்கி மற்றும் ஜொமோட்டோ நிறுவனங்கள் பலருக்கும் கை கொடுத்துள்ளன.

இந்த வரிசையில் தற்போது உத்வேகம் அளிக்க கூடிய கதை ஒன்று நமக்கு தெரியவந்துள்ளது. குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் பெண் ஒருவர், ஜொமோட்டோ நிறுவனத்தின் உணவு டெலிவரி ஏஜெண்ட் ஆக வேலை செய்து வருகிறார். பெண்கள் இந்த வேலையை செய்வதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லைதான்.
ஏனெனில் பெரிய நகரங்களில் ஆண்களுக்கு இணையாக நிறைய பெண்கள், உணவு டெலிவரி ஏஜெண்ட் ஆக வேலை செய்து கொண்டுதான் உள்ளன. ஆனால் இந்த பெண்ணை பற்றி மட்டும் நாம் இங்கே பேசி கொண்டிருக்க காரணம் உள்ளது. இந்த பெண், செல்லும் இடங்களுக்கு எல்லாம், தனது குழந்தையையும் அழைத்து செல்கிறார்.

இந்த பெண் ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கில் (Hero Splendor) உணவு டெலிவரி செய்து வருகிறார். அந்த பைக்கின் முன் பகுதியில் தனது குழந்தையை வைத்து கொண்டு அவர் உணவு டெலிவரிக்கு செல்லும் வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
இது குறித்து சம்பந்தப்பட்ட பெண் கூறுகையில், ''நான் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்துள்ளேன். திருமணத்திற்கு பிறகு எனக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. ஏனெனில் என்னுடைய குழந்தையையும் நான் என்னுடன் வேலைக்கு அழைத்து செல்ல வேண்டிய தேவை இருந்தது.
அப்போதுதான் என்னிடம் பைக் இருக்கும் விஷயம் எனக்கு நினைவிற்கு வந்தது. உணவு டெலிவரி ஏஜெண்ட் ஆக வேலை செய்தால், என்னுடைய குழந்தையையும் கூடவே வைத்து கொள்ளலாம். எனவேதான் இந்த வேலையை நான் தேர்வு செய்தேன்'' என்றார். முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் உழைக்கும் இந்த பெண்ணின் தன்னம்பிக்கையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: உண்மையில் இந்த பெண்ணின் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி பாராட்டுக்குரியதுதான். முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, இவர் ஒரு முன்னுதாரணம். காலில் செருப்பு கூட அணியாமல் உழைக்கும் இந்த பெண், சிறிய விஷயங்களில் எல்லாம் குறை கண்டுபிடித்து கொண்டுள்ளவர்களுக்கு, முன்மாதிரியாக திகழ்கிறார்.
ஆனால் செருப்பை போல், இந்த பெண் ஹெல்மெட்டும் (Helmet) அணியவில்லை. அந்த பெண்ணின் குழந்தையின் தலையிலும் ஹெல்மெட்டை நம்மால் காண முடியவில்லை. இது பாதுகாப்பு விஷயத்தில் பிரச்னைகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. டூவீலர்களில் பயணம் செய்பவர்களுக்கு இருக்கும் அதிகபட்ச பாதுகாப்பு உபகரணமே ஹெல்மெட்தான்.
எதிர்பாராதவிதமாக சாலை விபத்தில் சிக்க நேரிட்டால், ஹெல்மெட்கள்தான் நம் உயிரை காப்பாற்றும். எனவே இந்த பெண் ஹெல்மெட் அணிந்து கொண்டு வேலையை செய்வது நல்லது என்று நாங்கள் கருதுகிறோம். ஆனால் இந்த அறிவுரை இந்த பெண்ணுக்கானது மட்டுமல்ல. இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் அனைவருக்குமானது!


Click it and Unblock the Notifications








