இவ்வளவு விலையில் ஒரு காரையே வாங்கிடலாமே!! கவாஸாகியில் மீண்டும் ஒரு விலையுயர்ந்த பைக் அறிமுகம்!
கவாஸாகி நிஞ்சா இசட்.எக்ஸ்-4ஆர் (Kawasaki Ninja ZX-4R) மோட்டார்சைக்கிள் மேம்படுத்தப்பட்ட தோற்றத்தில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. கவாஸாகியின் 400சிசி பைக்கான புதிய நிஞ்சா இசட்.எக்ஸ்-4ஆர் பைக்கை பற்றிய முக்கிய சிறப்பம்சங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதுமே கவாஸாகி நிஞ்சா பைக்குகளுக்கு ஓர் தனி கிரேஸ் உள்ளது. இதனாலோ என்னவோ கவாஸாகி நிஞ்சா பைக்குகளின் விலைகளும் அதிகமாக இருக்கின்றன. தற்போது, இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ள கவாஸாகி நிஞ்சா இசட்.எக்ஸ்-4ஆர் ஆனது 400சிசி பைக்காக இருப்பினும் சுமார் ரூ.8.49 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது.

இது, கவாஸாகியின் 650சிசி அட்வென்ச்சர் பைக்கான வெர்ஸஸ் 650 -ஐ காட்டிலும் கிட்டத்தட்ட ரூ.75,000 அதிகம் ஆகும். அதேநேரம், கவாஸாகியின் அளவில்-பெரிய நாக்டு பைக்கான இசட்900 -ஐ விட ரூ.70,000 குறைவாகும். புதிய கவாஸாகி நிஞ்சா இசட்.எக்ஸ்-4ஆர் மோட்டார்சைக்கிளில் 399சிசி லிக்யுடு-கூல்டு இன்லைன்-4 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது.
இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 80 எச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. கிட்டத்தட்ட இதே அளவிலான இயக்க ஆற்றல் தான் ஹோண்டா சிபி650ஆர் பைக்கிலும் கிடைக்கிறது. ஆனால், புதிய இசட்.எக்ஸ்-4ஆர் பைக்கில் 80 எச்பி வரையிலான ஹார்ஸ் பவரை பெற 14,500 ஆர்பிஎம் வேகத்தில் என்ஜினை இயக்க வேண்டும். அதாவது, சற்று அதிகமாக ஆக்ஸலரேட்டரை கொடுத்தால் மட்டுமே இந்த பைக்கில் மிக அதிவேகத்தில் இயங்க முடியும்.

சுமார் 80 எச்பி வரையிலான ஹார்ஸ் பவரை வெளிப்படுத்தினாலும், இந்த பைக்கின் என்ஜின் மூலம் 39 என்எம் வரையிலான டார்க் திறன் மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே புதிய இசட்.எக்ஸ்-4ஆர் பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், சில வெளிநாட்டு சந்தைகளில் உயர்-நிலை எஸ்.இ வேரியண்ட்டிலும் இந்த பைக்கை கவாஸாகி நிறுவனம் விற்பனை செய்கிறது.
சஸ்பென்ஷனுக்கு இந்த கவாஸாகி பைக்கில் முன்பக்கத்தில் தலைக்கீழான ஷோவா ஃபோர்க்கும், பின்பக்கத்தில் ப்ரீலோடு அட்ஜெஸ்ட்மெண்ட் வசதி கொண்ட மோனோஷாக்கும் பொருத்தப்பட்டு உள்ளன. பிரேக்கிங் பணியை முன் சக்கரத்தில் நிஸின் 4-பிஸ்டன் ரேடியல் காலிபர்கள் உடன் 290மிமீ டபுள் டிஸ்க்கும், பின்பக்கத்தில் 220மிமீ-இல் சிங்கிள் டிஸ்க்கும் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன், ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் வசதியும் உள்ளது.

பைக்கின் டயர் அளவுகள் 120/70-இசட்.ஆர்17 மற்றும் 160/60-இசட்.ஆர்17 ஆகும். தொழிற்நுட்ப அம்சங்மாக, மாடர்ன் கவாஸாகி பைக்குகளுக்கே உண்டான 4.3-இன்ச் வண்ண டிஎஃப்டி திரை வழங்கப்பட்டுள்ளது. ப்ளூடூத்தை ஏற்கக்கூடிய இந்த திரையின் வாயிலாக டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் மற்றும் நோட்டிஃபிகேஷன் எச்சரிக்கைகளை பெறலாம்.
ஸ்போர்ட், ரோடு, மழை மற்றும் கஸ்டம் என 4 விதமான ரைடிங் மோட்கள் இந்த கவாஸாகி பைக்கில் உள்ளன. இதில் கஸ்டம் மோடில், தேவையான டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் பவர் மோட்களை நிர்ணயித்து, ரைடர் தனக்கென பிரத்யேகமாக ஒரு ரைடிங் மோடை உருவாக்கிக் கொள்ளலாம். புதிய கவாஸாகி நிஞ்சா இசட்.எக்ஸ்-4ஆர் பைக்கிற்கு விற்பனையில் எந்த பைக்கும் நேரடி போட்டி இல்லை. ஆனால், ஹார்ஸ்-பவரை பொறுத்து பார்த்தால், ஹோண்டாவின் சிபிஆர்650ஆர் போட்டியாக விளங்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கவாஸாகி நிறுவனம் அவ்வப்போது தனது புதிய மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது வழக்கமான ஒன்றே. இந்த வகையில் தான், மேம்படுத்தப்பட்ட புதிய நிஞ்சா இசட்.எக்ஸ்-4ஆர் பைக் களமிறக்கப்பட்டு உள்ளது. அதேநேரம், இந்த புதிய நிஞ்சா பைக், வரவிருக்கும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் கவாஸாகி பிராண்டின் விற்பனைக்கு முக்கிய பங்கு வகிக்கும்.


Click it and Unblock the Notifications
