கிளட்ச் இல்லாத புதிய மாடல் பைக்- டிவிஎஸ் அறிமுகம்

'டிவிஎஸ் ஜைவ் பைக்' மற்றும் 'டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்' ஆகிய இப்புதிய மாடல்களை டி.வி.எஸ் மோட்டார்ஸ் நிறுவன தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் சென்னையில் அறிமுகப்படுத்தினார்.
இப்புதிய பைக், கிளட்ச் இல்லாமல் தானாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பைக் எந்த கியரில் சென்று கொண்டிருந்தாலும் உடனடியாக நியூட்ரலுக்குக் கொண்டு வர முடியும். கியரை படிப்படியாகக் குறைத்து நியூட்ரலுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. பைக்கை எந்த கியரில் நிறுத்தினாலும், அதே கியரில் வண்டியை தொடர்ந்து ஓட்டலாம்.
110 சிசி என்ஜின், 12 லிட்டர் கொள்ளளவு பெட்ரோல் டேங்க் ஆகியவற்றுடன் கூடுதலாக பைக் இருக்கையின் அடியில் பொருள்களை வைத்துக் கொள்ள இட வசதி உள்ளது. இதன் விலை ரூ. 41 ஆயிரம். நீலம், சிவப்பு, கருப்பு ஆகிய நிறங்களில் உள்ளன.
டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரில், 110 சிசி என்ஜின், 12 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்புறத்தில் பெட்ரோல் டேங்க் அமைக்கப்பட்டுள்ளது. ஐந்து லிட்டர் கொள்ளளவு பெட்ரோல் டேங்க், செல்போன் சார்ஜ் செய்யும் வசதி உள்ளிட்டவை இதில் உள்ளன. விலை ரூ. 42 ஆயிரம்.
அறிமுக நிகழ்ச்சியின் போது, டி.வி.எஸ் மோட்டார்ஸ் தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் நிருபர்களிடம் கூறுகையில், 'போக்குவரத்து நெரிசலின்போது கியர்களை அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பதும், கிளட்சை உபயோகிப்பதும் வாகன ஓட்டிகளுக்கு சிரமமான விஷயமாக உள்ளது.
இதனால் புதிய ஜைவ் பைக் போக்குவரத்து நெரிசலில் செல்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த இரண்டு மாடல்களுமே டிசம்பர் மாதத்தில் விற்பனைக்கு வரும்' என்றார்.


Click it and Unblock the Notifications








