இரட்டை ஸ்பார்க் பிளேம் பைக்கை மறு அறிமுகம் செய்யும் டி.வி.எஸ்.

இந்த தகவலை டி.வி.எஸ். மோட்டார்ஸின் சேர்மனும், தலைவருமான வேணு ஸ்ரீனிவாசன் தெரிவித்தார். இந்த பைக் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டபோது இதில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பமும், இரட்டை ஸ்பார்க்கும் தனி காப்புரிமை மீறல் என்று கடந்த 2008-ம் ஆண்டு பஜாஜ் ஆட்டோ லிமிடெட் குற்றம் சாட்டியது.
இந்த இரு கம்பெனிகளுக்கும் இடையே நடந்த சண்டையின் முதற் கட்டத்தில், இரட்டை ஸ்பார்க் உள்ள இந்த பைக்கை விற்கத் தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் டி.வி.எஸ். மேல்முறையீடு செய்து கடந்த செப்டம்பர் மாதம் வழக்கை வென்றது.
இதையடுத்து இரட்டை ஸ்பார்க் பிளக் உள்ள பிளேம் பைக்கை தற்போது மறு அறிமுகம் செய்யவுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக ஒரு ஸ்பார்க் உள்ள பிளேம் பைக்கைத் தான் விற்பனை செய்து வந்தது.
புதிதாக எதையும் அறிமுகப்படுத்தாத போதிலும் டி.வி.எஸ்.ஸின் விற்பனை சமீப காலமாக அதிகரித்து உள்ளது. மாதத்திறகு 8000 கியர் இல்லாத ஜைவ் பைக்குகள் விற்பனையாகின்றன.
வரும் செப்டம்பர் மாதத்தில் 12,000 பைக்குகளும், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து இந்த வருட இறுதி மாதங்களில் 15,000 பைக்குகள் வரை விற்கக்கூடும் என்று அந்த கம்பெனி எதிர்பார்க்கிறது.
டி.வி.எஸ்.ஸிடம் ஸ்டார், ஸ்போர்ட்ஸ் ஆகிய 100 சிசி மோட்டார் சைக்கிள்கள் உள்ளன. மோபட்டின் விற்பனை 20 சதவிகிதம் அதிகரித்துள்ளது கமபெனிக்கே ஆச்சரியமாக உள்ளதாம். இந்த ஆண்டு சுமார் 6.5 லட்சம் மோபட்களை விற்கத் திட்டமிட்டுள்ளது டி.வி.எஸ்.
இது குறித்து வேணு ஸ்ரீனிவாசன் கூறியதாவது,
விற்பனையில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றம் இந்தியாவின் தெற்கு பகுதிக்கு வெளியில் இருந்து தான் வருகிறது. இது ஆச்சரியத்திற்குரியது. ஏனென்றால், மோபட்களின் பயன்பாடு பொதுவாக தென்பகுதிகளில் தான் அதிகம். தற்போது வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் மோபட் மார்க்கெட் சூடு பிடித்துள்ளது என்று அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications








