ஸ்கூட்டர் இந்தியா பங்குகள் விற்பனை ஒத்திவைப்பு!

மத்திய அரசின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், லக்ணோவில் தொழிற்சாலை அமைத்து வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
ஸ்கூட்டர் தயாரிப்பை கைவிட்ட அந்த நிறுவனம் தற்போது மூன்று சக்கர வாகனங்களை மட்டும் உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிறுவனத்தில் 1,200 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 2002ம் ஆண்டு முதல் அந்த நிறுவனம் கடும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. அந்த நிறுவனத்தின் 95 சதவீத பங்குகள் மத்திய அரசின் வசம் உள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனத்தை மீட்டு வளர்ச்சி பாதைக்கு கொண்டுவருவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது.
இதற்காக, தகுதி வாய்ந்த ஆட்டோ நிறுவனத்திடம் ஸ்கூட்டர்ஸ் இந்தியா பங்குகள் முழுவதையும் விற்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு, மத்திய அமைச்சரவையும் கடந்த மேமாதம் அனுமதி வழங்கிவிட்டது.
ஆனால், தற்போது தேர்தல் ரூபத்தில் ஸ்கூட்டர்ஸ் இந்தியாவுக்கு சோதனை வந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் காரணம் காட்டி ஸ்கூட்டர் இந்தியா பங்கு விற்பனையை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது.
தேர்தல் சமயத்தில் பங்குகளை விற்பனை செய்தால், அது தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அந்த மாநிலத்தை சேர்ந்த கட்சித்தலைவர்கள் கேட்டுக்கொண்டதால் காங்கிரஸ் மேலிடத்தின் அறிவுறுத்தலின்பேரில் மத்திய அரசு இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








