விற்பனையில் 30 லட்சத்தை கடந்து டிவிஎஸ் ஸ்டார் பைக் சாதனை

கடந்த 2004 ம் ஆண்டு டிவிஎஸ் ஸ்டார் அறிமுகம் செய்யப்பட்டது. மற்ற பைக்குகளுடன் ஒப்பிடும்போது குறைந்த விலையில் அதிக அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டதால், நடுத்தர மற்றும் கிராமப்புற மக்களின் உற்ற தோழனாக மாறியது ஸ்டார்.
மேலும், கால ஓட்டதுக்கு ஏற்ப எலக்ட்ரிக் ஸ்டார்ட்டர், கிராபிக் டிசைன் ஸ்டிக்கர் என நவீன அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டதால், மக்களிடம் ஸ்டார் நிரந்தரமாக ஜொலித்து வருகிறது. இந்நிலையில், விற்பனையில் ஸ்டார் 30 லட்சத்தை கடந்து சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து டிவிஎஸ் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு தலைவர் கூறியதாவது:
"உயர்ந்த தொழில்நுட்ப தரம் கொண்டுள்ளதால், ஸ்டாருக்கு மக்களிடத்தில் தனிமதிப்பு உள்ளது. இதனால், பல புதிய மாடல் பைக்குகள் வந்தாலும் மார்க்கெட்டில் ஸ்டாருக்கு தனி இடத்தை தக்கவைத்து வருகிறது.
முதல்நிலை ரகத்தை சேர்ந்த பைக்குகளில் ஸ்டார் குறைந்த விலையில், அதிக தரத்துடன் வருவதால், ஸ்டாருடன் மற்ற பைக்குகள் போட்டியிட முடியவில்லை. இதனால், விற்பனையில் 30 லட்சம் என்ற புதிய மைல்கல்லை கடந்து ஸ்டார் சாதனை படைத்துள்ளது.
இந்த சாதனை எங்களுக்கு பெருமையையும், பெருமிதப்படும் வாய்ப்பையும் ஒருங்கே கொடுத்துள்ளது. மேலும், ஸ்டார் சாதனைக்கு மக்களின் ஆதரவே முக்கிய காரணம். இதை தக்கவைத்துக்கொள்ள தொடர்ந்து உயரிய தொழில்நுட்ப அம்சங்களுடன் ஸ்டார் விற்பனை செய்யப்படும்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








