ரூ.1,100 கோடி வரிப்பணம்: மஹாராஷ்டிர அரசுக்கு பஜாஜ் 'செக்'

நாட்டின் இருசக்கர வாகன தயாரிப்பில் இரண்டாம் இடம் வகிக்கும் பஜாஜ் ஆட்டோ மஹாராஷ்டிர மாநிலம், சகன் மற்றும் அவுரங்காபாத் ஆகிய இடங்களில் தொழிற்சாலை அமைத்து இருசக்கர வாகன உற்பத்தி செய்து வருகிறது. மஹாராஷ்டிராவை விட்டால் உத்தரகாண்ட் மாநிலம், பாந்த் நகரில் ஒரு தொழிற்சாலை உள்ளது.
இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் உற்பத்திக்கு தேவையான 90 சதவீத உதிரிபாகங்களை மஹாராஷ்டிராவை சேர்ந்த சப்ளையர்களிடமிருந்து பஜாஜ் ஆட்டோ பெறுகிறது. உதிரிபாகங்களுக்கான விலையுடன், அதற்கு விதிக்கப்படும் வாட் வரியை சப்ளையர்களிடம் பஜாஜ் ஆட்டோ செலுத்திவிடுகிறது.
இந்த நிலையில், பஜாஜ் ஆட்டோ உற்பத்தி செய்யும் இருசக்கர வாகனங்களில் 12 சதவீதம் மட்டுமே மஹாராஷ்டிராவில் விற்பனையாகிறது. இதைக்கருத்தில்கொண்டு, பஜாஜ் ஆட்டோ சப்ளையர்களுக்கு கொடுக்கும் வாட் வரியில் குறிப்பிட்ட சதவீதத்தை திருப்பிக் கொடுக்கும் வகையில் மஹாராஷ்டிர அரசு சலுகை வழங்கியுள்ளது.
இந்த நிலையில், கடந்த 5 காலாண்டுகளாக பஜாஜ் ஆட்டோவுக்கு வழங்கவேண்டிய ரூ.1,100 கோடி வரிச்சலுகை தொகையை மராட்டிய அரசு வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. இதுதொடர்பாக, அம்மாநில அரசிடம் பல முறை தொடர்புகொண்டபோதிலும், சரியான பதில் கிடைக்கவில்லை.
இதனால், மராட்டிய அரசு மீது பஜாஜ் ஆட்டோ கடும் அதிருப்தியடைந்துள்ளது. தங்களுக்கு வழங்கவேண்டிய தொகையை திருப்பி தராவிட்டால், அடுத்ததாக மேற்கொள்ளவிருக்கும் தொழிற்சாலை விரிவாக்கப் பணிகளை மஹாராஷ்டிராவில் மேற்கொள்ளப்போவதில்லை என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பஜாஜ் மேலாண் இயக்குனர் ராஜீவ் பஜாஜ் கூறியதாவது:
" ஒவ்வொரு காலாண்டிற்கும் வரிச்சலுகை அடிப்படையில் ரூ.220 கோடியை மஹாராஷ்டிர அரசு திருப்பிகொடுக்கவேண்டும். ஆனால், கடந்த 5 காலாண்டுகளாக அரசிடமிருந்து வரிச்சலுகைக்கான தொகை வரவில்லை.
இதுவரை, ரூ.1,100 கோடியை அரசு திருப்பி கொடுக்கவேண்டும். அரசிடமிருந்து முறையான அணுகுமுறைகள் இல்லை. எனவே, அடுத்து மேற்கொள்ளவிருக்கும் விரிவாக்க பணிகளை குஜாராத்தில் மேற்கொள்ள திட்டமி்ட்டுள்ளோம்.
தவிர, சகன் பகுதியில் நிலவும் தொழிலாளர் பிரச்னையும் முக்கிய காரணம். ஆனால், குஜராத்தில் ஆட்டோ உற்பத்திக்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது," என்றார்.
மஹாராஷ்டிர அரசு மீது கடந்த வாரம் வோக்ஸ்வேகன் கார் நிறுவனத்தலைவர் டாக்டர் ஜான் சாக்கோ கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார். மேலும், பல முக்கிய பிரச்னைகளை தீர்க்க அரசு முன்வராவிட்டால், அங்கு விரிவாக்கப்பணிகளை மேற்கொள்ளப் போவதில்லை என்றும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








