கேடிஎம் டியூக் ஆப்-ரோடு பைக் விரைவில் அறிமுகம்:பஜாஜ்

ஆப்-ரோடு பைக் தயாரிப்பில் புகழ்பெற்ற ஆஸ்திரேலியாவை சேர்ந்த கேடிஎம் நிறுவனத்தின் குறிப்பிட்ட பங்குகளை பஜாஜ் ஆட்டோ தன்வசம் வைத்துள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, டியூக் ஆப்-ரோடு பைக்குக்கான தொழில்நுட்பத்தை கேடிஎம் நிறுவனத்திடமிருந்து பெற்று மஹாராஷ்டிராவிலுள்ள சகன் ஆலையில் டியூக் பைக்கின் உற்பத்தியை சமீபத்தில் துவங்கியது பஜாஜ்.
125சிசி திறனும் 15 ஹார்ஸ் பவரும் கொண்ட இந்த பைக்குகளை பஜாஜ் ஆட்டோ ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த நிலையில், உள்நாட்டு சந்தையில் டியூக்கை அறிமுகம் செய்ய இருப்பதாக பஜாஜ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பஜாஜ் ஆட்டோ மேலாண் இயக்குனர் ராஜீவ் பஜாஜ் கூறியதாவது:
"சகனில் உள்ள தொழிற்சாலையில் இதுவரை உற்பத்தி செய்யப்பட்டுள்ள 1,800 பைக்குகள் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதியில் டியூக் பைக்குகளை பிரேசிலில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். அதேசமயத்தில், உள்நாட்டிலும் கேடிஎம் டியூக் பைக் அறிமுகம் செய்யப்படும்.
இந்த பைக்குகள் ஆப்-ரோடு சாகச பயணங்கள் மேற்கொள்பவர்களின் எதிர்பார்ப்புகளை எளிதில் பூர்த்தி செய்யும் வடிவமைப்பு மற்றும் அம்சங்களை கொண்டிருக்கும். இந்த பைக்கின் மார்க்கெட் எதிர்பார்த்த அளவு இருந்தால், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்," என்றார்.
உள்நாட்டு சந்தையில் அறிமுகமாகும் டியூக் பைக்கின் திறனை அதிகப்படுத்த பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளதாக ஆட்டோமொபைல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 125 சிசி திறனுடன் 20 ஹார்ஸ் பவர் கொண்ட எஞ்சினுடன் டியூக் களமிறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








