'ஹீரோ மோட்டோ கார்ப்': ஹீரோ ஹோண்டாவின் புதிய பெயர்!

ஹீரோஹோண்டாவின் புதிய பெயருக்கு மத்திய கம்பெனிகள் பதிவுத்துறை நேற்று அனுமதி வழங்கியதையடுத்து, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஹீரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹீரோஹோண்டா கூட்டுகுழுமத்திலிருந்து ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம் விலகியதையடுத்து, இந்தியாவின் ஹீரோ நிறுவனம் சந்தையில் தனித்து செயல்பட இருக்கிறது.
இதற்காக, நிறுவனத்தின் பெயரை மாற்ற முஞ்சால் குழுமத்தின் கீழ் செயல்படும் ஹீரோ நிறுவனம் முடிவு செய்தது. லண்டனை சேர்ந்த பிரபல நிறுவனம் ஹீரோஹோண்டாவின் புதிய பிராண்டு பெயர் மற்றும் சின்னத்தை வடிவமைத்து கொடுத்துள்ளது.
லண்டன் நிறுவனம் தெரிவித்த புதிய பிராண்டு பெயருக்கு கடந்த மாதம் முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்தனர்.இந்த நிலையில், மத்திய கம்பெனிகள் பதிவுத்துறையும் ஹீரோஹோண்டாவின் புதிய பெயருக்கு ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து, ஹீரோஹோண்டா பெயரை ஹீரோமோட்டோ கார்ப் என்று மாற்றம் செய்யப்படுவதாக ஹீரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஹீரோமோட்டோ கார்ப் நிர்வாக இயக்குனர் பவன் முஞ்சால் கூறுகையில்,"புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கிறோம். தொழில்நுட்பம், வடிவமைப்பு, மற்றும் ஏற்றுமதி என அனைத்து துறைகளிலும் புதிய கண்ணோட்டத்தில் தனித்து செயல்பட இருக்கிறோம்," என்றார்.
ஹீரோஹோண்டா பெயர் மாற்றப்பட்டுவிட்ட நிலையில், வரும் ஆகஸ்ட் 9ந் தேதி ஹீரோமோட்டோ கார்ப் நிறுவனத்துக்கான புதிய சின்னம் லண்டனில் அறிமுகம் செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








