ஆட்டோ தயாரிப்பில் கால் பதிக்க ஹீரோ திட்டம்

இந்தியாவின் ஹீரோ நிறுவனமும், ஜப்பானின் ஹோண்டா நிறுவனமும் இணைந்து கூட்டு தொழில்நுட்ப ஓப்பந்த அடிப்படையில் பைக் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தன. இந்நிலையில், ஓப்பந்தத்திலிருந்து ஹோண்டா நிறுவனம் விலகியதால், இரு நிறுவனங்களுக்கும் இடையிலான 26 ஆண்டு கால பந்தம் முடிவுக்கு வந்தது.
இதையடுத்து, பைக் தயாரிப்பில் தனித்து ஈடுபடவும், ஏற்றுமதி துறையில் கால் பதிக்கவும், ஹீரோ நிறுவனம் முடிவு செய்தது. உள்நாட்டிலும்,அண்டை நாடுகளிலும் சரக்கு மற்றும் பயணிகள் ஆட்டோக்களுக்கு நல்ல கிராக்கி உள்ளது. இதையடுத்து,ஆட்டோ தயாரிப்பில் ஈடுபடவும், ஹீரோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான சாத்தியகூறுகள் பற்றி அந்நிறுவனம் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.
ஆட்டோ தயாரிப்பில் கோலோச்சி வரும் பஜாஜ் நிறுவனம் உள்நாட்டு சந்தையில் 40 சதவீத இடத்தை பெற்றுள்ளது. இதேபோன்று, டிவிஎஸ் நிறுவனமும் ஆட்டோ தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இரு நிறுவனங்களும் பைக்குகளில் பயன்படுத்தப்படும், 150சிசி திறன் கொண்ட இன்ஜின்களில் மாறுதல் செய்து ஆட்டோக்களில் பயன்படுத்துகின்றன.
இதேபோன்று, ஹீரோ நிறுவனமும், தனது ஹங்க் மற்றும் கரீஷ்மா பைக்குகளில் பயன்படுத்தப்படும் 150மற்றும் 225 சிசி திறன் கொண்ட இன்ஜின்களில் மாறுதல் செய்து ஆட்டோக்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து ஹோண்டா நிறுவனத்துடன் ஹீரோ நிறுவனம் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
டெல்லியில் சமீபத்தில் ஹீரோ நிறுவனத்தின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், உதிரிபாகங்கள் மற்றும் விற்பனை சம்பந்தப்பட்ட சுமார் 50 நிறுவனங்களை சேர்ந்த பிரிதிநிதிகள் கலந்துகொண்டனர். அப்போது, ஆட்டோ தயாரிப்பு குறித்த தனது எண்ணத்தை ஹீரோ நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது. இதற்கு,அந்நிறுவனங்களை சேர்ந்த பிரிதிநிதிகளும் ஓப்புதல் தெரிவித்ததாக தெரிகிறது.
இதுகுறித்து ஆட்டோமொபைல் வல்லுனர் ஓருவர் கூறுகையில், 'ஆட்டோ தயாரிப்பு மூலம் பஜாஜ் மற்றும் டிவிஎஸ் நிறுவனங்கள் 20 சதவீதம் லாபத்தை ஈட்டி வருகின்றன. எனவே, ஆட்டோ தயாரிப்பில் ஹீரோ நிறுவனமும் ஈடுபடுவதில் ஆச்சயரிமில்லை' என்றார்.


Click it and Unblock the Notifications








