2 புதிய மோட்டார் சைக்கிள் ஆலைகளை கட்டுவதற்கு ஹோண்டா திட்டம்

இந்திய மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டில் மிகப்பெரிய நிறுவனம் என்ற அந்தஸ்தை பெறுவதற்கான முயற்சிகளை ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
ஹீரோ ஹோண்டா நிறுவனத்திலிருந்து விலகிய அந்த நிறுவனம் தற்போது இந்தியாவில் நம்பர் ஒன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் என்ற அந்தஸ்தை பெறும் வகையில் காய்களை நகர்த்தி வருகிறது.
ஹரியானா மாநிலம், குர்கானில் ஒரு மோட்டார்சைக்கிள் ஆலையும், ராஜஸ்தான் மாநிலம், தபுகெராவில் ஒரு மோட்டார்சைக்கிள் ஆலையும் ஹோண்டாவுக்கு உள்ளது. தபுகெரா ஆலை சமீபத்தில்தான் உற்பத்தியை துவங்கியது.
இந்த நிலையில், பெங்களூர் அருகில் நரசபுரம் என்ற இடத்தில் 3 வது ஆலையை கட்டும் பணிகளை ஹோண்டா துவங்கிவிட்டது. வரும் 2013ல் இந்த புதிய ஆலை உற்பத்தியை துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மேலும் புதிதாக 2 தொழிற்சாலைகளை கட்டுவதற்கான முயற்சிகளை ஹோண்டா தொடங்கியுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இந்த புதிய ஆலைகளில் உற்பத்தி துவங்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது
புதிய ஆலைகள் கட்டுவது தொடர்பாக குஜராத் மற்றும் உத்தரகாண்ட் அரசுகளுடன் கடந்த இரண்டு மாதங்களாக ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரூ.500 கோடி முதலீட்டில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த இரண்டு புதிய ஆலைகள் மூலம் ஆண்டுக்கு 25 லட்சம் மோட்டார்சைக்கிள்களை உற்பத்தி செய்ய ஹோண்டா திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய ஆலைகள் உற்பத்தியை துவங்கும்போது ஆண்டுக்கு 1 கோடி மோட்டார்சைக்கிள்கள் உற்பத்தி செய்யும் திறனை ஹோண்டா பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








