மார்ச் மாதம் 100சிசி பைக்கை அறிமுகம் செய்ய ஹோண்டா திட்டம்?

ஹீரோஹோண்டா கூட்டு குழுமத்திலிருந்து விலகிய ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம், இந்திய இரு சக்கர மார்க்கெட்டில் தனக்கென தனி இடத்தை பிடிக்க முனைப்பு காட்டி வருகிறது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் நவீன தொழில்நுட்பம் கொண்ட புதிய மாடல்களை அறிமுகப்படுத்த அந்நிறுவனம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
ட்வி்ஸ்ட்டர், ஷைன்,ஸ்டன்னர், யூனிகார்ன், டேஸ்லர், ஆக்டிவா, டியோ, சிபிஆர்1000 ஆர்ஆர் உள்ளிட்ட ஏராளமான மாடல்களை இந்திய மார்க்கெட்டில் ஹோண்டா அறிமுகப்படுத்தி உள்ளது. இருப்பினும்,100சிசிக்குள் திறன் கொண்ட மாடலை ஹோண்டா இதுவரை அறிமுகப்படுத்தவில்லை.
இந்தநிலையில்,இந்திய மார்க்கெட்டில் 100சிசி பைக்குகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது. 100சிசி பைக்குகள் அதிக மைலேஜ் தருவதால்,வாடிக்கையாளர் மத்தியில் நிலையான இடம் உள்ளது. இதை கவனத்தில் கொண்ட ஹோண்டா, 100சிசி பைக்கை அறிமுகப்படுத்த போவதாக கடந்த ஆண்டு அறிவித்தது. ஆனால், இதுவரை அதுகுறித்து எந்த தகவலையும் ஹோண்டா வெளியிடாமல் மவுனம் காத்து வருகிறது.
இந்தநிலையில்,வரும் மார்ச் மாதம் புதிய 100சிசி பைக்கை அறிமுகப்படுத்த ஹோண்டா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. புதிய 100சிசி பைக்கை அறிமுகப்படுத்துவதன் மூலம் தற்போதுள்ள தங்கள் விற்பனை வளர்ச்சியை 40 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக அதிகரிக்க முடியும் என ஹோண்டா ஆணித்தரமாக கருதுகிறது.
இதுதவிர, புதிய 100சிசி பைக்கை உற்பத்தி செய்வதற்காக தனி தொழிற்சாலையை அமைக்கவும் ஹோண்டா திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, அதிக உற்பத்தி திறன் கொண்ட தொழிற்சாலை இருக்கும் நிலையில்,புதிய 100சிசி பைக் உற்பத்திக்காக தனி தொழிற்சாலை அமைக்க ஹோண்டா முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல் ஆட்டோமொபைல் துறையினரின் புருவத்தை உயர்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








