புதிய 150 சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கை அறிமுகப்படுத்த ஹோண்டா திட்டம்?

யூனிகார்ன் மூலம் மார்க்கெட்டில் கெட்டியான இடத்தை பிடித்துவைத்துள்ள ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் விரைவில் சிபிஆர் 150 சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த புதிய பைக் 4 வால்வ் கொண்ட 150சிசி டிஓஎச்சி எஞ்சினுடன் வர இருக்கிறது. இந்த எஞ்சின் 18.98 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன்கொண்டதாக இருக்கும். யமஹா ஆர்15 போன்று 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டதாக இந்த புதிய ஸ்போர்ட்ஸ் பைக் கலக்க வருகிறது.
முன்பக்கம் டெலிஸ்கோப்பிக் போர்க்ஸ் கொண்டதாகவும், பின்பக்கம் மோனோஷாக் ஸ்விங்ஆர்ம் சஸ்பென்ஷன் இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் என்பதால் அதிர்வுகளிலிருந்து விடுதலை கிடைக்கும். முன்பக்கம் நிசான் டிஸ்க்பிரேக் பொருத்தப்பட்டிருக்கும்.
ஸ்டெப்டு இருக்கை பைக்கின் தோற்றத்தை வெகு அழகாக கூட்டுவதாக இருக்கும். மேலும், 17 இஞ்ச் அலாய் வீல்கள் கொண்டதாக இந்த பைக் வருகிறது. ஆனால், யூனிகார்ன் போன்று இதிலும் அனலாக் ஸ்பீடோமீட்டர் பொருத்தப்பட்டிருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கர்நாடகத்தில் தனது 3வது இருசக்கர வாகன தொழிற்சாலை கட்டுமானப் பணிகளை துவங்கியுள்ள அந்த நிறுவனம் விரைவில் தமிழகத்தில் தனது புதிய மற்றும் 4 வது இருசக்கர வாகன உற்பத்தி ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








