நான்கு மாடல்களுடன் மீண்டும் களமிறங்கும் எல்எம்எல்

கான்பூரை சேர்ந்த எல்எம்எல் நிறுவனம் மோட்டார்சைக்கிள் உற்பத்தியில் புகழ்பெற்ற நிறுவனமாக திகழ்ந்தது. இத்தாலியை சேர்ந்த பியாஜியோ நிறுவனத்துடன் இணைந்து வெஸ்பா மற்றும் அட்ரினோ மற்றும் ப்ரீடம் பிராண்டுகளில் மோட்டார்சைக்கிள்களை உற்பத்தி செய்து வந்தது.
இந்த நிலையில், நிதி நெருக்கடி, தொழிலாளர் பிரச்னை போன்ற காரணங்களால் கடந்த 2006ம் ஆண்டு எல்எம்எல் நிறுவனம் நலிவடைந்தது. இந்த நிலையில், நாட்டின் மோட்டார்சைக்கிள் சந்தை கிடுகிடுவென வளர்ந்து வருவதால், சந்தையில் மீண்டும் ஒரு ரவுண்டு வருவதற்கு அந்த நிறுவனம் தயாராகிவிட்டது.
இன்னும் சில மாதங்களில் முதலாவதாக 200சிசி கியர் ஸ்கூட்டரையும், அதைத்தொடர்ந்து, 125சிசி பவர் ஸ்கூட்டரையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. தவிர,இந்த ஆண்டு இறுதியில் 100சிசி மற்றும் 125சிசி ப்ரீடம் பைக் மாடல்களையும் அறிமுகப்படுத்த உள்ளது.
இதுகுறித்து எல்எம்எல் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைப் பிரிவு தலைவர் சவுத்ரி கூறியதாவது:
"சில காரணங்களால், மோட்டார்சைக்கிள் உற்பத்தியை நிறுத்தி வைத்திருந்தோம்.தற்போது மீண்டும் நான்கு புதிய மாடல்களுடன் ச்நதையில் களமிறங்க இருக்கிறோம். சொந்த வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களுடன் எங்களது புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
நான்கு மாடல்களில் 200சிசி கியர் ஸ்கூட்டரும் ஒன்று. இது ஏற்றுமதியை கருத்தில்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இது உள்நாட்டு சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது நம் நாட்டு வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும் வகையில் அதிக திறன் கொண்டதாக இருக்கும்.
இந்த ஆண்டு இறுதியில் ப்ரீடம் பிராண்டில் பைக்குகளை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டு இருக்கிறோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








