டீசல் புல்லட்டை களமிறக்க ராயல் என்பீல்டு முடிவு

இந்தியாவில் அதிக சிசி திறன் கொண்ட மோட்டார்சைக்கிளுக்கான மார்க்கெட்டில் போட்டி அதிகரித்து வருகிறது. ஹார்லி டேவிட்சன், கார்வேர், ட்ரையம்ப் என வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் மேலோங்க துவங்கியுள்ளது.
இதைக்கருத்தில்க்கொண்டு, நாட்டின் பழமைவாய்ந்த மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ராயல்என்பீல்டு நிறுவனம் அதிக சிசி திறன் கொண்ட புதிய மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும், டீசல் புல்லட்டை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
எலக்ட்ரிக் ஸ்டார்டருடன் அதிக மைலேஜ் கொடுக்கும் வகையில் டாரஸ் என்ற பெயரில் டீசல் புல்லட்டை ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த 1990ம் ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்தது. ஆனால், மாசுக்கட்டுப்பாட்டு பிரச்னை காரணமாக கடந்த 1996ம் ஆண்டு டீசல் புல்லட் உற்பத்தியை ராயல் என்பீல்டு நிறுத்தியது.
இந்த நிலையில், பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதையடுத்து டீசல் புல்லட்டை மீண்டும் அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. புதிய டீசல் புல்லட் 400 சிசி எஞ்சின் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிர, 750 சிசி புல்லட்டையும் அறிமுகப்படுத்தவும் ராயல் என்பீல்டு திட்டமிட்டுள்ளது. இந்த இரண்டு புல்லட் மாடல்களும் தற்போது ராயல் என்பீல்டு ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு மையத்தில் சோதனை நிலைகளில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








