ரூ.8.8 லட்சத்தில் எம்-800 குரூஸர் பைக்: சுஸுகி அறிமுகம்

சுஸுகி இன்ட்ரூடர் இந்திய சந்தைக்கு புதிய மாடல் அல்ல. ஏற்கனவே அதிக சக்திவாய்ந்த எம்-1800 குரூஸர் பைக்கை சுஸுகி விற்பனை செய்து வருகிறது.
ஆனால், எம்-1800 குரூஸர் பைக் இந்திய மார்க்கெட்டில் எதிர்பார்த்த வெற்றியை பெற வில்லை. இதற்கு முக்கிய காரணம் அந்த பைக்கின் அதிக விலை. ஆம். எம்-1800 குரூஸர் பைக் ரூ.15.5 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இதனால், அந்த பைக்கின் பக்கம் இந்திய வாடிக்கையாளர்கள் திரும்பவில்லை. இதை புரிந்துகொண்ட சுஸுகி நிறுவனம் தற்போது முந்தைய இன்ட்ரூடரின் பாதி விலையில், புதிய எம்-800 குரூஸர் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக் ரூ.8.8 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய இன்ட்ரூடர் எம்-800 குரூஸர் பைக்கின் தொழில்நுட்ப விபரங்களை பார்க்கலாம். புதிய எம்-800 குரூஸர் பைக்கில் 8 வால்வுகள் கொண்ட 805 சிசி வி-ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.
இந்த எஞ்சின் அதிக எரிபொருள் சேமிப்பு மற்றும் பிக்கப்பையும் வழங்கும். இந்த புதிய குரூஸர் பைக் சென்னை, டெல்லி, பெங்களூர், ஐதராபாத், மும்பை, புனே,அகமதாபாத் உள்ளிட்ட 12 இந்திய நகரங்களில் உள்ள சுஸுகி டூ வீலர் ஷோரூம்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுஸுகி டூ வீலர் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு துணைத் தலைவர் அதுல் குப்தா கூறுகையில்,"இளைஞர்களை வெகுவாக கவரும் அம்சங்கள் மற்றும் விலைப்பட்டியலில் இந்த புதிய குரூஸர் பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் சுஸுகியிடமிருந்து வந்துள்ள இந்த புதிய பைக் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்று நம்புகிறோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








