ஏபிஎஸ் தொழில்நுட்பம் கொண்ட அப்பாச்சி RTR 180: டிவிஎஸ் அறிமுகம்

டிவிஎஸ் நிறுவனத்தின் பெருமைமிகு மாடல்களில் ஒன்றான அப்பாச்சி, விற்பனையிலும் முன்னிலை வகிக்கிறது. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு தக்கவாறு, புதிய தொழில்நுட்ப அம்சங்களுடம் மேம்படுத்தப்பட்ட அப்பாச்சி மாடல்களை டிவிஎஸ் அறிமுகம் செய்து வருகிறது.
இந்நிலையில், இந்திய மோட்டார்சைக்கிள் சந்தையும், வாடிக்கையாளரும் இதுவரை கண்டிராத வகையில், கார்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வரும் நவீன தொழில்நுட்பமான ஆண்ட்டி லாக்கிங் பிரேக்கிங் தொழில்நுட்பத்தை தனது அப்பாச்சி பைக்கில் புகுத்தி அறிமுகம் செய்துள்ளது டிவிஎஸ்.
இந்த புதிய ஏபிஎஸ் தொழில்நுட்பம் பிரேக் அடிக்கும்போது சக்கரங்கள் சறுக்குவதை தடுக்கும். மேலும், சாதாரண பிரேக்குகளைவிட ஏபிஎஸ் பொருத்தப்பட்ட பிரேக்குகள் வாகனத்தின் சக்கரங்களை குறைந்த தூரத்திலேயே நிறுத்திவிடும்.
மணல் படிந்த சாலைகள் மற்றும் மழைக்காலங்களில் ஈரப்பதம் மிகுந்த சாலைகளிலும் சக்கரங்கள் சறுக்குவதை ஏபிஎஸ் தொழில்நுட்பம் தடுத்துவிடும். அவசர காலத்தில் பிரேக் அடிக்கும்போது சக்கரங்களை சறுக்காமல் பார்த்துக்கொள்ளும் இந்த ஏபிஎஸ் தொழில்நுட்பம்.
இந்த புதிய பாதுகாப்பு தொழில்நுட்பம் இந்திய மோட்டார்சைக்கிள் சந்தையில் முதன்முதலாக அறிமுகப்படுத்தி இருப்பதாக டிவிஎஸ் நிறுவனம் பெருமிதம் தெரிவித்துள்ளது. ஜெர்மனியை சேர்ந்த கான்டினென்டல் நிறுவனத்திடமிருந்து ஏபிஎஸ் தொழில்நுட்பத்தை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஏபிஎஸ் தொழில்நுட்பத்துக்கு ஏற்ற வகையில் ட்யூப்லெஸ் டயர்களுடன் வந்துள்ள புதிய அப்பாச்சி வெள்ளை நிறத்தில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய பிரேக் பாதுகாப்பு அம்சம் கொண்ட அப்பாச்சி டெல்லியில் ரூ.78,880 என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








