பிப்ரவரியில் மோட்டார்சைக்கிள் விற்பனை உயர்வு: நிறுவனங்கள் அறிவிப்பு

இந்தியாவின் இரு சக்கர வாகன விற்பனை சந்தை நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. புத்தாண்டு துவக்கம் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு சாதகமான ஆண்டாக அமைந்து வருகிறது.
கடந்த ஜனவரி மாதத்தை போன்றே, பிப்ரவரியிலும் வாகன விற்பனை நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. பல்வேறு முன்னணி நிறுவனங்களும் விற்பனையில் நல்ல வளர்ச்சியை கண்டதாக அறிவித்துள்ளன.
ஹீரோ ஹோண்டா விற்பனை:
இரு சக்கர வாகன விற்பனையில் முன்னிலை வகிக்கும் ஹீரோ ஹோண்டா நிறுவனத்தின் விற்பனை பிப்ரவரியில் 24 சதவீதம் உயர்நதுள்ளது.
ஹீரோ ஹோண்டா வெளியிட்டுள்ள அறிக்கையில்,"பிப்ரவரியில் 4,72,055 இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு பிப்ரவரி மாத விற்பனையுடன் (3,82,096 வாகனங்களை) ஒப்பிடுகையில், கடந்த மாதம் விற்பனை 23.54 சதவீதம் உயர்ந்துள்ளது. மேலும், தொடர்ந்து 10 வது மாதமாக விற்பனை 4 லட்சத்தை கடந்து சாதனை படைத்து வருகிறது,"என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிவிஎஸ் விற்பனை:
இரு சக்கர வாகன விற்பனையில் முன்னிலை வகிக்கும் டிவிஎஸ் நிறுவனம், பிப்ரவரியில் மோட்டார்சைக்கிள் விற்பனை 24 சதவீத வளர்ச்சி கண்டதாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"கடந்த மாதம் 1,77,412 மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1,42,676 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. இதை ஒப்பிடும்போது நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் விற்பனை 24 சதவீதம் உயர்வு கண்டுள்ளது,"என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோண்டா விற்பனை:
இரு சக்கர வாகன விற்பனை பிப்ரவரியில் 19 சதவீதம் வளர்ச்சி கண்டதாக ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹோண்டா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"பிப்ரவரியில் 1,45,816 பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு பிப்ரவரியில் 1,22,261 இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டதுடன் ஒப்பிடும்போது கடந்த மாதம் விற்பனை 19.27 சதவீதம் உயர்வு கண்டுள்ளது.
இதில், மோட்டார்சைக்கிள் விற்பனை 27.54சதவீதமும்,ஸ்கூட்டர் விற்பனை 13.21சதவீதமும் உயர்வு கண்டது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுஸுகி விற்பனை:
இரு சக்கர வாகன தயாரிப்பில் பிரபல நிறுவனமான சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் விற்பனை பிப்ரவரியில் 25 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.இதுகுறித்து சுஸுகி இந்தியா நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு துணைத் தலைவர் கூறுகையில்,"கடந்த மாதம் 28,738 மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.இது கடந்த ஆண்டு பிப்ரவரியுடன் ஒப்பிடும்போது(23,016மோட்டார்சைக்கிள்கள்)24.86 சதவீதம் விற்பனை வளர்ச்சி கண்டுள்ளது,"என்றார்.


Click it and Unblock the Notifications