விற்பனை உயர்வு: பைக் உற்பத்தியை கணிசமாக உயர்த்தும் யமஹா

ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் யமஹா பைக்குகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதனால், யமஹாவின் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு கணிசமாக உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில், பைக்குகளுக்கான மார்க்கெட் தேவையை சமாளிக்கும் வகையில் ரூ.50 கோடி முதலீட்டில் தனது ஆலையை விரிவாக்கம் செய்ய இருப்பதாக யமஹா தெரிவித்துள்ளது. இதன்மூலம், ஆண்டுக்கு 4 லட்சம் பைக்குகளை கூடுதலாக உற்பத்தி செய்யும் திறனை யமஹா பெற்றுவிடும்.
இதுகுறித்து யமஹா நிறுவனத்தின் வர்த்தக பிரிவு தலைவர் ராய் குரியன் கூறியதாவது:
"ஆண்டுக்கு தற்போது 6 லட்சம் பைக்குகளை உற்பத்தி செய்யும் திறனை பெற்றிருக்கிறோம். இதை ஆண்டுக்கு 10 லட்சம் பைக்குகளாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.
இதற்காக, உத்தரபிரதேச மாநிலம், சூரஜ்பூரிலுள்ள ஆலையில் புதிய உற்பத்தி பிரிவை துவங்க உள்ளோம். ரூ.50 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்யப்பட உள்ள இந்த உற்பத்தி பிரிவின் மூலம் ஆண்டுக்கு கூடுதலாக 4 லட்சம் பைக்குகளை உற்பத்தி செய்ய முடியும்," என்றார்.
கடந்த ஆண்டு உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதியை சேர்த்து யமஹா நிறுவனம் 3.8 லட்சம் பைக்குளை விற்பனை செய்தது.
இந்த நிலையில், இந்த ஆண்டு உள்நாட்டில் மட்டும் 3.3 லட்சம் பைக்குளை விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளது. அடுத்த ஆண்டு உள்நாட்டு மார்க்கெட்டில் 4.5 லட்சம் பைக்குகளையும், 2013ம் ஆண்டு 7 லட்சம் பைக்குகளையும் விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஏற்றுமதியை பொறுத்தவரை இந்த ஆண்டு 1.7 லட்சம் பைக்குகளையும், அடுத்தடுத்த ஆண்டுகளில் இதை கணிசமாக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது. வரும் 2014ம் ஆண்டில் உள்நாட்டில் மட்டும் ஆண்டுக்கு 10 லட்சம் பைக்குகளை விற்பனை செய்யும் இலக்கை எட்டவும் யமஹா திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








