ஸ்பிளென்டரை வீழ்த்தி உலகின் நம்பர்-1 ஆக வாகை சூடிய பஜாஜ் டிஸ்கவர்

நம் நாட்டு மார்க்கெட் மட்டுமின்றி உலக அளவில் அதிகம் விற்பனையாகும் பைக் மாடலாக ஹீரோ ஸ்பிளென்டர் திகழ்ந்து வருகிறது. மேலும், விற்பனையில் நீண்ட காலமாக முதலிடத்தில் இருந்து வந்தது. ஆனால், ஸ்பிளென்டருக்கு பஜாஜ் ஆட்டோவின் டிஸ்கவர் பைக் பெரும் போட்டியாக இருந்து வந்தது.
இந்த நிலையில், செப்டம்பர் மாத விற்பனையில் ஹீரோ ஸ்பிளென்டர் விற்பனையை டிஸ்கவர் விஞ்சி முதலிடம் பெற்றுள்ளதாக பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 1,21,018 ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகள் விற்பனையாகின.
ஆனால், கடந்த மாதம் 1,22,968 டிஸ்கவர் பைக்குகள் விற்பனையாகி உலகின் அதிகம் விற்பனையாகும் பைக்குளின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பஜாஜ் ஆட்டோவின் மோட்டார்சைக்கிள் வர்த்தகப் பிரிவு தலைவர் சீனிவாஸ் கூறுகையில்,"டிஸ்கவர் பைக் நிலைநிறுத்தப்பட்ட விதம், விற்பனை கொள்கைகளே டிஸ்கவரின் வெற்றிக்கு காரணம்," என்று கூறினார்.
கடந்த மே மாதம் அதிகபட்ச அளவாக 2,53,149 ஸ்பிளென்டர் பைக்குகள் விற்பனையான நிலையில், அடுத்தடுத்த மாதங்களில் அந்த பைக்கின் விற்பனை கடுமையாக சரிந்து வருகிறது. இந்தநிலையில், விற்பனையில் நீண்ட காலமாக பிடித்து வைத்திருந்த முதலிடத்தையும் செப்டம்பரில் ஸ்பிளென்டர் இழந்து பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
இதனிடையே, செப்டம்பர் மொத்த விற்பனையில் ஹீரோவின் விற்பனை 14 சதவீத வீழ்ச்சி கண்டுல்ளது. இந்த நிலையில், பண்டிகை காலத்தில் பைக் விற்பனை முன்னேற்றம் பெறும் என ஹீரோ நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








