தூம்3 படத்திற்காக சூப்பர் பைக்கில் பறந்த அமீர்கான்
தூம்3 படத்திற்காக பிஎம்டபிள்யூ சூப்பர் பைக்கில் அமீர்கான் செய்யும் சாகச காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளன.
கடந்த 2004 ம் ஆண்டு வெளியான தூம் 1, 2006ல் வெளியான தூம் 2 ஆகிய படங்கள் பாலிவுட்டில் பெரும் வெற்றியை பெற்றன. முதல் பாகத்தில் ஜான் ஆபிரஹாம், இரண்டாம் பாகத்தில் ஹிருத்திக் ரோஷன் நடித்தனர். தூம் படங்களில் வில்லன் வேடம்தான் பிரபலம்.

இந்த நிலையில், நடிகர் ரஜினியை தூம்3 படத்தில் வில்லனாக்க முயற்சிகள் நடந்தது. ஆனால், அது வெற்றி பெறவில்லை. தற்போது தூம்3 படத்தில் அமீர்கான் வில்லனாக நடித்து வருகிறார். ஏற்கனவே வந்த இரண்டு தூம் வரிசை படங்களிலும் பைக் சேஸிங் சீன்கள் இடம்பெற்றிருந்தன.
இதேபோன்று, தூம் 3 படத்திலும் மயிர் கூச்செரிய செய்யும் பைக் சேஸிங் காட்சிகள் ஹாலிவுட் படங்கள் ஸ்டைலில் வர இருக்கின்றன. இதற்காக, அமெரிக்காவின் சிக்காகோ நகரில் தூம்3 படத்திற்கான பைக் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
அங்கு நடந்த பைக் ரேஸிங் காட்சிகளில் பிஎம்டபிள்யூ கே 1200 ஆர் பைக்கில் அமீர்கான் செல்வது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
அதிக திறன் கொண்ட பிஎம்டபிள்யூ கே 1200 ஆர் பைக்கை அழகாக அடக்கி காட்டி காட்சிகளுக்கு அமீர்கான் அழகு சேர்த்து வருகிறார். அமீர்கான் பயன்படுத்தி வரும் பிஎம்டபிள்யூ கே 1200 ஆர் பைக் திறந்த மேனி எனப்படும் நேக்டு ஸ்டைல் வடிவமைப்பு கொண்டது.
1162 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் இந்த பைக் அதிகபட்சம் 161 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். இது பிரிமியம் எஸ்யூவிக்களின் எஞ்சின்களுக்கு ஒப்பானது. 6 ஸ்பீட் கியர் பாக்ஸ் கொண்டது.
அதிக உறுதித் தன்மை கொண்ட டை காஸ்ட் அலுமினியத்தில் இதன் ஃபிரேம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வேகத்தை எளிதாக கட்டுப்படுத்தும் வகையில் முன்பக்கம் டபுள் டிஸ்க் பிரேக்கும், பின்பக்கம் சிங்கிள் டிஸ்க் கொண்ட பிரேக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக் 211 கிலோ எடை கொண்டது.
ஏபிஎஸ் பிரேக், திருட்டை எச்சரிக்கும் தொழில்நுட்பம், தனிவான இருக்கை, லக்கேஜ் ரேக் ஆகியவை கூடுதல் அம்சங்கள். இந்த பைக்கில் ஜிபிஎஸ் கருவி பொருத்த முடியும். இதனை பிஎம்டபிள்யூ நிறுவனமே விற்பனை செய்கிறது.


Click it and Unblock the Notifications








