இத்தாலி நிறுவனத்துடன் ஹீரோ மோட்டோ புதிய ஒப்பந்தம்

ஹோண்டா பிரிந்ததையடுத்து, தொழில்நுட்பத்துக்காக புதிய நிறுவனங்களுடன் ஹீரோ மோட்டாகார்ப் ஒப்பந்தம் செய்து வருகிறது. அமெரிக்காவை சேர்ந்த எரிக் புயெல் மற்றும் ஆஸ்திரியாவை சேர்ந்த ஏவிஎல் நிறுவனம் ஆகியவற்றுடன் ஹீரோ மோட்டாகார்ப் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறது.
பைக்குகளுக்கான நவீன கட்டிங் எட்ஜ் வடிவமைப்பு தொழில்நுட்பத்துக்காக இத்தாலியை சேர்ந்த எஞ்சின்ஸ் எஞ்சினியரிங் நிறுவனத்துடன் ஹீரோ மோட்டோகார்ப் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. ஹோண்டாவிடமிருந்து பெற்ற இம்பல்ஸ், இக்னைட்டர், மேஸ்ட்ரோ ஆகிய மாடல்களுக்கு விரைவில் விடை கொடுக்கப் போவதாக ஹீரோ சமீபத்தில் தெரிவித்தது.
இதேபோன்று, அடுத்த இரு ஆண்டுகளில் ஹோண்டாவின் அனைத்து மாடல்களுக்கும் குட்பை சொல்லிவிட்டு, முற்றிலுமாக புதிய மாடல்களை அந்த நிறுவனம் களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், இந்த ஆண்டுக்குள் தனது அனைத்து தயாரிப்புகளிலிருந்தும் ஹோண்டா பெயரை முற்றிலுமாக நீக்கப்படும் என்று ஹீரோ தெரிவித்துள்ளது.
புதிய தொழில்நுட்ப பார்ட்னர்களின் ஒத்துழைப்புடன் அடுத்து வரும் ஆண்டுகளில் அடுத்த தலைமுறை அம்சங்களுடன் கூடிய முழுக்க புதிய வடிவமைப்பு மற்றும் எஞ்சின் பொருத்தப்பட்ட புதிய பைக் மாடல்களை அறிமுகப்படுத்த இருப்பதாக ஹீரோ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








