அக்டோபரில் பின்னிய ஸ்பிளென்டர்: மீண்டும் நம்பர்-1 ஆக வாகை சூடியது
கடந்த மாதம் ஹீரோ ஸ்பிளென்டர் விற்பனையில் முதலிடத்தை பிடித்தது. இதேபோன்று, ஹீரோ நிறுவனத்தின் விற்பனையும் 5 லட்சத்தை தாண்டியது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் 6 மாதங்களில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விற்பனை தொடர்ந்து சரிந்து வந்தது. ஹோண்டா நிறுவனம் கழன்றதன் எதிரொலியாகவே இது பார்க்கப்பட்டது. மேலும், பல ஆண்டுகளாக விற்பனையில் முதலிடத்தில் இருக்கும் ஸ்பிளென்டர் விற்பனையை செப்டம்பரில் பஜாஜ் டிஸ்கவர் முந்தியதால் ஹீரோ கலக்கமடைந்தது.
இந்த நிலையில், கடந்த அக்டோபரில் ஸ்பிளென்டர் விற்பனை மீண்டும் முதலிடத்துக்கு வந்தது. கடந்த மாதம் மொத்தம் 1.80 லட்சம் ஸ்பிளென்டர் பைக்குகள் விற்பனையாகியிருக்கிறது. அதேவேளை, பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 1.52 லட்சம் டிஸ்கவர் பைக்குகளை விற்பனை செய்துள்ளது.
இதுதவிர, ஸ்பிளென்டர் கொடுத்த உற்சாகம் காரணமாக கடந்த மாதம் ஹீரோவின் விற்பனை மீண்டும் 5 லட்சத்தை தாண்டியது. பஜாஜ் ஆட்டோ 2.62 லட்சம் பைக்குகளை விற்பனை செய்து இரண்டாவது இடத்திலும், ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் 2.36 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன.
விற்பனை ஏற்றம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹீரோ சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனைப் பிரிவு தலைவர் அனில் துவா கூறியதாவது,"நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் எங்களது மார்க்கெட் பங்களிப்பு 45.3 சதவீதத்திலிருந்து 42.7 சதவீதமாக குறைந்திருந்தது. ஆனால், வரும் மாதங்களி்ல் இது சரியாகிவிடும்.
இதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். மேலும், கடந்த மாதம் முதல் 15 நாட்கள் நாங்கள் விற்பனை செய்த அளவுதான் பிற நிறுவனங்களின் ஒட்டுமொத்த விற்பனை. எனவே, முதலிடத்தை தொடர்ந்து தக்க வைப்போம். அதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்," என்றார்.


Click it and Unblock the Notifications