டிவிஎஸ் மோட்டார்சை தொடர்ந்து பஜாஜ் இடத்துக்கு குறி வைத்த ஹோண்டா

கடந்த ஆண்டு ஹீரோ ஹோண்டாவிலிருந்து விலகிய ஜப்பானிய நிறுவனமான ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் நம்பர் 1 இருசக்கர வாகன தயாரிப்பாளராக பட்டம் சூட்டும் பணிகளை விரைவுப்படுத்தியுள்ளது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள்களுக்கான மார்க்கெட்டும் சூடுபிடித்துள்ளதையடுத்து, அதை தக்கவைத்துக்கொள்ளும் முயற்சிகளை ஹோண்டா முடுக்கி விட்டுள்ளது. இதற்கு கைமேல் பலனாக கடந்த ஜனவரியில் நீண்ட காலமாக விற்பனையில் 3ம் இடத்தில் இருந்த டிவிஎஸ் மோட்டார்சை ஹோண்டா பின்னுக்குத் தள்ளி அந்த இடத்தை பிடித்தது.
இதைத்தொடர்ந்து, தற்போது பஜாஜ் ஆட்டோவை பின்னுக்குத் தள்ளி விரைவில் இரண்டாம் இடத்துக்கு ஹோண்டா முன்னேறும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் விற்பனையில் பஜாஜ் ஆட்டோவுக்கும், ஹோண்டாவுக்கும் வெறும் 7,000 மோட்டார்சைக்கிள்களே குறைவாக இருந்தது.
கடந்த மாதம் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2.04 லட்சம் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. அதேவேளை, ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் 1.97 லட்சம் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. இதனால், பஜாஜ் ஆட்டோவுக்கு ஹோண்டாவிடமிருந்து கடும் நெருக்கடியும், சந்தைப்போட்டியும் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications