ட்ரீம் யுகாவுக்கு அடுத்து புதிய 100சிசி பைக்கை களமிறக்க ஹோண்டா திட்டம்

ஹீரோ ஹோண்டாவிலிருந்து பிரிந்த பிறகு மார்க்கெட்டை பிடிக்கும் முயற்சிகளை ஹோண்டா முடுக்கி விட்டுள்ளது. இதற்கு நல்ல பலனும் கிடைத்து வருகிறது.
டிவிஎஸ் மோட்டார்சை 3வது இடத்திலிருந்து பின்னுக்குத் தள்ளியதோடு பஜாஜ் ஆட்டோவின் இரண்டாம் இடத்தையும் ஆட்டம் காண வைத்துவிட்டது.
இந்த நிலையில், சற்று உயர்ந்த இடத்தில் இருக்கும் தனது முன்னாள் பார்ட்னரான ஹீரோவை வீழ்த்துவதற்கு பல முக்கிய நடவடிக்கைகளை ஹோண்டா மேற்கொண்டுள்ளது.
இதற்காக, மாஸ் மார்க்கெட் பைக்குகளை அடுத்தடுத்து களமிறக்க உள்ளது. 110சிசி ட்ரீம் யுகா பைக்கை விற்பனைக்கு கொண்டு வந்துள்ள அந்த நிறுவனம் அடுத்து ஸ்பிளன்டர் மார்க்கெட்டை பிடிக்க முடிவு செய்துள்ளது.
இந்த மார்க்கெட்டில் முக்கிய இடம் பிடித்தால் முதல் இடம் என்பதை வெகு சுலபமாக பிடித்து விடலாம் என்று கணக்கு போட்டுள்ளது.
இதற்காக, அதிக மைலேஜ் கொடுக்கும் புதிய 100சிசி பைக்கை தயாரித்து வருகிறது. யுகாவுக்கு அடுத்து இந்த புதிய 100சிசி பைக்கை அந்த நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய பைக்கை வைத்து கிராமப்புற மார்க்கெட்டிலும் கலக்க முடியும் என்று அந்த நிறுவனம் ஆணித்தரமாக நம்புகிறது.
ஸ்கூட்டர் மார்க்கெட்டில் முதலிடத்தில் இருக்கும் அந்த நிறுவனம் அதை தக்கவைக்க புத்தம் புதிய 125 சிசி ஸ்கூட்டரை கே24ஏ என்ற குறியீட்டு பெயரில் தயாரித்து வருகிறது. இந்த புதிய ஸ்கூட்டர் ஏவியேட்டர் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு வருகிறது.
ஹீரோ மட்டுமல்ல பஜாஜ் ஆட்டோவின் டிஸ்கவர் மற்றும் பல்சர் 135 பைக்குகளுக்கு போட்டியை கொடுக்கும் விதத்தில் புதிய 135 சிசி பைக்கை கே23ஏ என்ற குறியீட்டு பெயரில் தயாரித்து வருகிறது.
ஹோண்டா வட்டாரத் தகவல்களும் இதை உறுதிப்படுத்தியுள்ளன. மேலும், வாடிக்கையாளர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கவும், மார்க்கெட்டை எளிதாக பிடிக்கவும் நாடு முழுவதும் 10 புதிய மண்டல அலுவலகங்களை திறக்கவும் திட்டமிட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், 500 சர்வீஸ் பாயிண்டுகளையும் அடுத்த வரும் ஆண்டுகளில் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மாடல்கள் மற்றும் தற்போதைய மாடல்களுக்கான காத்திருப்பு காலத்தை குறைக்கவும் புதிய ஆலையையும் அந்த நிறுவனம் கட்டி வருவதோடு, ஏற்கனவே உள்ள ஆலைகளையும் விரிவாக்கம் செய்யவும் முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








