விற்பனையில் மீண்டும் பஜாஜை பின்னுக்குத் தள்ளிய ஹோண்டா

மோட்டார்சைக்கிள் விற்பனையில் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் தற்போது யாரும் எட்ட முடியா இடத்தில் உட்கார்ந்து கொண்டுள்ளது. ஆனால், இதுவரை இரண்டாம் இடத்தில் இருந்து வந்த பஜாஜ் ஆட்டோவுக்கு ஹோண்டாவால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
விற்பனையில் ராக்கெட் வேக வளர்ச்சி பெற்று வரும் ஹோண்டா நிறுவனம் கடந்த மார்ச்சில் பஜாஜ் ஆட்டோவை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்து பஜாஜுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. ஆனால், ஏப்ரலில் பஜாஜ் ஆட்டோ சுதாரித்துக் கொண்டு இரண்டாம் இடத்தை தக்கவைத்தது.
இந்த நிலையில், மேமாதத்தில் மீண்டும் ஹோண்டா இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் பஜாஜ் ஆட்டோ 3,21,922 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. இதில், ஏற்றுமதியை தவிர்த்தால் கடந்த மாதம் பஜாஜ் ஆட்டோ 1.90 லட்சம் முதல் 2 லட்சத்துக்குள்தான் உள்நாட்டில் விற்பனை செய்திருக்க முடியும்.
ஆனால், ஹோண்டா நிறுவனம் 2,21,540 ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. எனவே, கடந்த மாதம் ஹோண்டா இரண்டாம் இடத்தை பிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும், கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ஹோண்டா விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு 1,45,729 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்திருந்த பஜாஜ் ஆட்டோ கடந்த மாதம் 2,21,540 மோட்டார்சைக்கிள்களை(ஸ்கூட்டர் உள்பட) விற்பனை செய்துள்ளது. ஹோண்டாவின் விற்பனை அதிவேக வளர்ச்சி கண்டு வருவதால் இரண்டாம் இடத்தை தக்க வைப்பதில் பஜாஜ் ஆட்டோவுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
விற்பனை வளர்ச்சியை அதிகரிப்பதற்காக ஹோண்டா நிறுவனம் ட்ரீம் யுகா என்ற மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு விட்டுள்ளது. இதேபோன்று, பஜாஜ் ஆட்டோவும் புதிய 125 சிசி டிஸ்கவர் மற்றும் புதிய பல்சரையும் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








