110சிசி எஞ்சினுடன் புதிய டியோ ஸ்கூட்டர்: ஹோண்டா அறிமுகம்

ஸ்கூட்டர் மார்க்கெட்டில் ஹோண்டா நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. அந்த நிறுவனம் விற்பனை செய்து வரும் ஹோண்டா ஆக்டிவா மற்றும் டியோ ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற மாடல்களாக திகழ்கின்றன.
குறிப்பாக, டியோ ஸ்கூட்டர் இளசுகளின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த நிலையில், கூடுதல் மைலேஜ் மற்றும் சொகுசான ரைடிங்கை வழங்கும் வகையில் புதிய ஸ்கூட்டர் மாடலை ஹோண்டா வடிவமைத்துள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி ஆட்டோ கண்காட்சியில் இந்த புதிய டியோ ஸ்கூட்டர் மாடலை ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் பார்வைக்கு அறிமுகம் செய்தது.
இந்த நிலையில், இன்று முறைப்படி டியோ ஸ்கூட்டரை ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 102 சிசி எஞ்சினுக்கு பதிலாக தற்போது புதிய 110சிசி எஞ்சினுடன் டியோ வந்துள்ளது.
தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் இரண்டாம் தலைமுறை ஆக்டிவா ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 110 சிசி எஞ்சின்தான் புதிய டியோவிலும் பொருத்தப்பட்டிருக்கிறது.
இருப்பினும், புதிய டியோ பழைய டியோ ஸ்கூட்டரைவிட 15 சதவீதம் அதிக மைலேஜை வழங்கும் என ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மாத இறுதிமுதல் இந்த ஸ்கூட்டர் ஷோரூம்களில் விற்பனைக்கு கிடைக்கும் என்று ஹோண்டா தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








