சென்னையில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து பைக்கில் சென்ற வாலிபர் பலி

சென்னை அரும்பாக்கம், நடுவங்கரை சேர்ந்தவர் ராஜ்குமார்(24). இவர் வானகரத்தில் உள்ள கல்லூரியின் விடுதியில் சமையல்காரராக வேலைபார்த்து வந்தார்.
வழக்கம்போல் இரவு சமையல் செய்வதற்காக நேற்று பிற்பகல் ராஜ்குமார் தனது பைக்கில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். நெற்குன்றத்தை தாண்டி செல்லும்போது, கண்ணிமைக்கும் நேரத்தில் பறந்து வந்த பட்டம் விடுவதற்கான மாஞ்சா நூல் அவரது கழுத்தில் சுற்றி இறுக்கியது.
கழுத்தை பிளேடு போன்று அறுத்ததால் ரத்த வெள்ளத்தில் ராஜ்குமார் கீழே விழுந்தார். அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
மாஞ்சா நூலால் உயிரிழந்த ராஜ்குமார் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். ஆனால், அவர் நீண்ட காலமாக சென்னையில்தான் வசித்து வந்தார். அவருக்கு அனிதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கினறனர். இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் 4 வயது பெண் குழந்தை மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து பலியான நிலையில், மீண்டும் நிகழ்ந்துள்ள மாஞ்சா நூல் பலி சம்பவம் சென்னைவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பட்டம் விடுபவர்களை பிடித்து அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மாஞ்சா நூலால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்புதான் எழுதியிருந்தோம். இந்த நிலையில், நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது. இந்த சம்பவத்தில் போலீசார் அக்கறையுடன் செயல்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிரைவ் ஸ்பார்க் வலியுறுத்துகிறது.


Click it and Unblock the Notifications








